நிலக்கோட்டையில் மூடப்பட்ட தனியார் ஆலையைதிறக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

நிலக்கோட்டை அருகே மூடப்பட்ட தனியார் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். 

நிலக்கோட்டை அருகே மூடப்பட்ட தனியார் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர். 
      திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் வெள்ளரிக்காய் ஏற்றுமதி செய்யும் தனியார் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில், அப்பகுதியைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி தொழிலாளர்கள் ஏற்படுத்திய சில பிரச்னைகளால் கடந்த சனிக்கிழமை முதல் ஆலை திடீரென மூடப்பட்டது.
      இதனால், அப்பகுதியைச் சேர்ந்த 450 தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். இந்நிலையில், அந்த ஆலையில் பணிபுரிந்து வந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மீண்டும் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்தனர்.
     இது தொடர்பாக நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் கூறியது: கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தனியார் ஆலையிலுள்ள இயந்திரங்களை பழுதாக்கிவிட்டு, மறுநாள் முதல் முன்னறிவிப்பின்றி 55 பேர் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகம், ஆலையை மூடிவிட்டதால் 400-க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளோம்.
      ஒரு சிலரின் சுய லாபத்துக்காகவும், தீய நோக்கத்துக்காகவும் ஆலையில் திட்டமிட்டே சில தொழிலாளர்கள் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளனர். எந்த தொழிற் சங்கத்திலும், தொழிலாளர் அமைப்பிலும் சேராத எங்களைப் போன்ற தொழிலாளர்களின் குடும்பங்கள், ஆலை நிர்வாகம் வழங்கிய ஊதியத்தை நம்பியே உள்ளன. எனவே, மூடப்பட்ட ஆலையை திறக்கவும், விரைவில் உற்பத்தியை தொடங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆட்சியரை சந்தித்தும் கோரிக்கை மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com