கண்மாயில் மண் எடுக்க கெடுபிடி: மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

கண்மாயிலிருந்து மண் எடுக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த

கண்மாயிலிருந்து மண் எடுக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள இ.மீனாட்சிபுரம் பகுதியில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு சார்பில் 1961 இல் கட்டப்பட்ட தொழிற்கூடத்தை தற்போது வரை பராமரித்து, அந்த இடத்திலேயே தற்போதும் மண்பாண்டங்களை செய்து வருகின்றனர். நிலக்கோட்டை வட்டத்தில் பள்ளப்பட்டி, பிள்ளையார்நத்தம், ஆர்.மீனாட்சிபுரம், சிறுநாயக்கன்பட்டி, பாத்தி நாயக்கன்பட்டி, குள்ளிச் செட்டிப்பட்டி, அம்மாப்பட்டி, மாவூத்தம்பட்டி, பொட்டி செட்டிப்பட்டி  உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வந்தாலும், கால சூழலுக்கு ஏற்ப தற்போது விவசாயம், தொழிற்சாலை உள்ளிட்ட மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிட்டனர். 
 இதனால், நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமன்றி, மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு, கோயில் திருவிழா மற்றும் வீடுகளுக்குத் தேவையான மண்பாண்ட பொருள்களை இ.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்களே வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கண்மாயிலிருந்து மண் எடுக்க விதிக்கப்பட்ட தடையால், மீனாட்சிபுரம் மண்பாண்டத் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக பிஎஸ்சி பட்டதாரியாக இருந்தபோதிலும், மண்பாண்டத்  தொழிலில் ஈடுபட்டு வரும் அழகர்சாமி (63) கூறியதாவது: இ.மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர்கள் நலவாரியத்திலும் உறுப்பினர்களாக உள்ளோம். ஆனாலும், மண் அள்ள கூட அனுமதி பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். கடந்த சில நாள்களுக்கு முன்பு வரையிலும், அருகிலுள்ள பிள்ளையார் நத்தம் கண்மாயில் மண் எடுத்து வந்தோம். ஆனால், கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் இல்லாமல் மண் எடுக்கக் கூடாது என காவல்துறையினர் மறுத்துவிட்டனர். கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றால், வட்டாட்சியரை பார்க்க சொல்கிறார். நிலக்கோட்டை வட்டாட்சியரிடம் சென்றால், அவர் மனுவைப் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்துவிட்டார். விரைவில் சோழவந்தான் ஜனகமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தொடங்கவுள்ளது. இத்திருவிழாவுக்கு மட்டும் அக்னிச் சட்டி, ஆயிரம் கண் பானை, 21 அக்னிச் சட்டி உள்பட 10ஆயிரம் மண்பாண்ட பொருள்களை செய்து கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது கண்மாய் மண் கிடைக்காததால், திருவிழாவுக்கு தேவையான பொருள்கள் தயாரிப்பு பணி முடங்கியுள்ளது. இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
 வாரத்திற்கு ஒரு வண்டி மண் கிடைத்தால் போதும், எங்கள் தொழில் பாதிப்பு இல்லாமல் தொடர்ந்து நடைபெறும். நாங்கள் எளிதாக கண்மாய் மண் எடுப்பதற்கு வழி ஏற்படுத்தக் கோரி விரைவில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com