செந்துறையில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 10th May 2019 07:25 AM | Last Updated : 10th May 2019 07:25 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், செந்துறை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செந்துறையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. செந்துறையை சுற்றி மணக்காட்டூர், மேற்குபட்டி, குடகிப்பட்டி, மந்தகுளத்துப்பட்டி, அடைக்கனூர், தொண்டபுரி, பிள்ளையார்நத்தம், வேப்பம்பட்டி, ராக்கம்பட்டி, கோட்டைப்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, ரெங்கையன் சேர்வைகாரன்பட்டி, போடிக்கம்பட்டி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை மட்டுமின்றி, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் என செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைப் பெற ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனிடையே செந்துறையில் இயங்கி வந்த மிகப் பழைய 108 ஆம்புலன்ஸ் வாகனம், சில நாள்களுக்கு முன்பு காட்டெருமை மோதியதில் சேதமடைந்தது.
ஏற்கெனவே அந்த வாகனம் பழுதான நிலையில் இருந்ததால், நோயாளிகள் உரிய நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைவதில் சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் காட்டெருமை மோதி பழுதான 108 ஆம்புலன்ஸ் வாகனம், பழுது நீக்கம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. பழுதுநீக்கம் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் திரும்பி வராததால், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வசதி பெற முடியாமல் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் சேவை துரிதமாக கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.