முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானல் ஏரியை சுத்தம் செய்ய தனிநபர்களிடமிருந்து பங்களிப்பு பெறப்படும்: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
By DIN | Published On : 15th May 2019 06:57 AM | Last Updated : 15th May 2019 06:57 AM | அ+அ அ- |

கொடைக்கானல் ஏரியை சுத்தம் செய்வதற்கு தனி நபர்களிடமிருந்து பங்களிப்பு பெறப்படும் என ஏரி பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல் ஏரியை பாதுகாப்பது, அழகுபடுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கொடைக்கானல் படகு குழாம் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தலைமை வகித்தார். படகு குழாம் சங்கத் தலைவர் பவானி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கொடைக்கானல் நகரின் மையப் பகுதியிலுள்ள ஏரியை பாதுகாப்பது பற்றியும் ஏரியில் படர்ந்துள்ள தாவரங்களை அகற்றியும், ஏரிச்சாலையைச் சுற்றியுள்ள தனியார் ஹோட்டல் விடுதிகள் கழிவுநீரை ஏரிக்குள் வரவிடாமல் தடுப்பது, ஏரியைச் சுற்றி தண்ணீர் சுத்திகரிப்பு தாவரங்கள் வளர்ப்பது, அவற்றை சுத்தம் செய்வது குறித்தும் பலர் பேசினர்.
தொடர்ந்து ஏரியை சுத்தம் செய்வதற்கு தமிழக அரசு நிதி உதவியுடன், தனியார் நிறுவனங்கள் பலவற்றின் பங்களிப்பும் இவற்றைத் தவிர்த்து பொது மக்களின் பங்களிப்புடன் நிதி திரட்டி ஏரியை பாதுகாப்பது குறித்து ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. தற்போது ஏரி நீர் மாசுபட்டு இருப்பதாகவும், இது மேலும் மாசுபடாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 70-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி கூறியதாவது: கொடைக்கானல் ஏரியை பாதுகாத்து, சுத்தப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறிய கருத்துகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும். அதன் பின் நடைபெறும் கூட்டத்தில் ஏரி பாதுகாப்பு குழுவின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள் என்றார்.