ஒட்டன்சத்திரம் அருகே மூதாட்டி மரணத்தில் மர்மம்: போலீஸார் விசாரணை
By DIN | Published On : 15th May 2019 06:58 AM | Last Updated : 15th May 2019 06:58 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் அருகே மூதாட்டி மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மகன் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பெருமாள்கோவில் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி (62). இவருக்கு இரண்டு மனைவிகள். இந்த நிலையில் பழனிச்சாமியின் தாயார் செல்லம்மாள் (80), பழனிச்சாமியின் 2 ஆவது மனைவி பெரியாத்தாள் மற்றும் மகன் பிரவீன்குமார் ஆகியோர் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 6 மாதத்திற்கு முன்பு பழனிச்சாமியிடம் சொத்தை பிரித்துத் தரச்சொல்லி பெரியாத்தாளும் அவரது மகனும் தகராறு செய்தார்களாம். இந்நிலையில் கடந்த மே 12-ஆம் தேதி வெளியூர் சென்றிருந்த பழனிச்சாமி வீட்டிற்கு வந்து தாயார் செல்லம்மாளை தன்னுடன் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அதற்கு மனைவியும், மகனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு உடல்நிலை சரியில்லாததால் செல்லம்மாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாராம். இதையடுத்து அவர் இறப்பில் மர்மம் உள்ளதாக கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் பழனிச்சாமி புகார் செய்தார். அதன் பேரில் மனைவி பெரியாத்தாள் மற்றும் மகன் பிரவீன்குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.