"ஸ்மார்ட்' வகுப்பறை, 100 சதவீத தேர்ச்சி இருந்தும் மாணவர் சேர்க்கைக்கு தடுமாறும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி!
By DIN | Published On : 15th May 2019 06:56 AM | Last Updated : 15th May 2019 06:56 AM | அ+அ அ- |

ஸ்மார்ட் வகுப்பறை, 100 சதவீதத் தேர்ச்சி, ஆங்கில வழிக் கல்வி இருந்தும், சுற்றுப்புறங்களிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் மாணவர் சேர்க்கைக்காக திண்டுக்கல் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தடுமாறி வருகிறது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2019-20 கல்வி ஆண்டு முதல் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகவே அதற்கான பணிகளை தொடங்கிவிட்ட பள்ளி நிர்வாகம், தற்போது மாணவர் சேர்க்கைக்காக அருகிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளை அணுகி வருகிறது.
கடந்த மாதம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ள நிலையில், அதனை ஒரு அங்கீகாரமாக முன் வைத்தும் ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை பணியில் தீவிரம் காட்டி வந்தனர். ஆனால், மேட்டுப்பட்டி சுற்றுப்புறப் பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகள், சக நிர்வாகத்திலுள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. தங்கள் பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி பயின்று வந்த மாணவர்களை, குறிப்பிட்ட சில அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே பரிந்துரைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேட்டுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மேட்டுப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பூச்சிநாயக்கன்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளி, சௌராஷ்ட்ரபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் 2 அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளிலிருந்து சுமார் 165 மாணவர்கள் 5ஆம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது 6ஆம் வகுப்புக்காக வேறு பள்ளிகளுக்குச் செல்ல தயராக உள்ளனர்.
இந்த மாணவர்களை, சில அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பரிந்துரை செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால், ஸ்மார்ட் வகுப்பறை, ஆங்கில வழிக் கல்வி, 100 சதவீத தேர்ச்சி என சாதனை பட்டியல்களோடு சென்றபோதிலும், தங்கள் பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்க முடியாமல் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சோர்வடைந்துள்ளனர். இதுதொடர்பாக மேட்டுப்பட்டி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு, மாநகராட்சி நிர்வாகத்தின் கீழுள்ள தொடக்கப் பள்ளிகளே ஆதரவளிக்க மறுத்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சுற்றுப்புறப் பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளை அணுகி வருகிறோம். கடந்த ஆண்டு வரை ஒரு மாணவரைக் கூட அந்த பள்ளிகள் பரிந்துரைக்கவில்லை. பிற பள்ளிகளில் சேர்க்கை கிடைக்காமல் கடைசி நேர புகலிடமாக எங்கள் பள்ளியில் தஞ்சமடையும் மாணவர்களுக்கு கூட சிறப்பான பயிற்சி அளித்து வருகிறோம். அதுபோன்று 10ஆம் வகுப்பு தொடக்கத்தில் கடந்த 2017 இல் வெளியேற்றப்பட்ட 17 மாணவர்களில் 14 பேரை தேர்ச்சி பெற வைத்து, 90 சதவீதத்திற்கும் கூடுதலான தேர்ச்சியைப் பெற்றோம்.
அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு தகுந்த மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்க அனுமதிக்க வேண்டும். அதேபோல், மாணவர்களின் இருப்பிடங்களைச் சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டுமே முதல் வாய்ப்பு அளிக்கும் வகையில், கல்வித்துறை மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்போது தான் அரசுப் பள்ளிகளை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வர முடியும் என தெரிவித்தனர்.