"கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும்'
By DIN | Published On : 16th May 2019 07:43 AM | Last Updated : 16th May 2019 07:43 AM | அ+அ அ- |

இந்துக்கள் மனம் புண்படும்படிபேசிய கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
கொடைக்கானலில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஹெச்.ராஜா ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 12 ஆம் தேதி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது பிரசாரத்தின் போதுபேசியது,இந்து மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. எனவே, கமல்ஹாசனை போலீஸார் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் எந்த பகுதியிலாவது மக்கள் பிரச்னைக்காக அவர் குரல் கொடுத்துள்ளாரா?
திரைப்பட படப்பிடிப்புக்காக வேண்டுமானால் தமிழகத்தில் பல்வேறு இடங்களைத் தேடி அவர் போயிருப்பார். அரவக்குறிச்சி தொகுதியில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தரம் தாழ்ந்த வார்த்தைகளை அவர் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது.
மேற்கு வங்கத்தில் அதிகமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும். மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார். விடுதலைப் புலிகள் அமைப்பை இந்தியாவில் தடை செய்தது சரியே. அதிமுக, பாஜ.க கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்றார்.