பழனியில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
By DIN | Published On : 16th May 2019 07:47 AM | Last Updated : 16th May 2019 07:47 AM | அ+அ அ- |

பழனியில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 80- க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வர பேருந்துகள், வேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இந்நிலையில், பள்ளிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களை குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி, மோட்டார் வாகன ஆய்வாளர், வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்டக் கல்வி அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வின் போது 80-க்கு மேற்பட்ட வாகனங்களை பழனி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி, பழனி வட்டாட்சியர் பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர் கருப்புச்சாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இதில், வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைக்கும் கருவி, முதலுதவிப்பெட்டி, அவசரகால வழி உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வு முடிவில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை சரிசெய்து அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்குள் கொண்டு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், வாகனங்கள் அனைத்துக்கும் சரியான ஆவணங்கள் இருக்கிறதா, காப்பீடு உள்ளதா உள்ளிட்டவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.