கண்காணிக்கப்படாத "ஃப்ளோ கண்ட்ரோல்' வால்வு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணுமா திண்டுக்கல் மாநகராட்சி?

குடிநீர் திருட்டை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட "ஃப்ளோ கண்ட்ரோல்' வால்வுகளை முறையாக கண்காணித்தால்

குடிநீர் திருட்டை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட "ஃப்ளோ கண்ட்ரோல்' வால்வுகளை முறையாக கண்காணித்தால் மட்டுமே, திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வார்டுகளில் சுமார் 45ஆயிரம் வீடுகளும், 10ஆயிரம் வணிக நிறுவனங்களும் உள்ளன. இதில், 30ஆயிரம் வீடுகளுக்கும், 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 
இந்த இணைப்புகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. 
 திண்டுக்கல் மாநகரட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவாலான குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து பழைய குடிநீர் குழாய்களுக்கு மாற்றாக ரூ.70.50 கோடி செலவில் 230 கி.மீட்டர் நீளத்திற்கு புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனிடையே சுமார் 25 கி.மீ. நீளத்திற்கான பகுதிகள் விடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டு, அதில் 23 கி.மீ. நீளத்திற்கு புதிய குழாய் பதிக்கும் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. 
ஜிக்கா திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, திண்டுக்கல் நகர மக்களுக்கு குறைந்தபட்சம் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
அதன்படி, பல பகுதிகளின் தண்ணீர் பிரச்னை முடிவுக்கு வந்தாலும், 1, 13, 14, 19, 41 ஆவது வார்டுகளில் 5 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் கிடைக்காத சூழல் உள்ளது. இதனால், பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் குடிநீர் பிரச்னை ஏற்படுவதற்கு, வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய்களில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீரின் அளவை சீராக விநியோகிக்கும் பிரத்யேக வால்வு (ஃப்ளோ கண்ட்ரோல் வால்வு) நீக்கப்பட்டிருப்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
 அதனை உறுதி செய்யும் வகையில், சௌந்தரராஜ நகர், அபிராமி அம்மன் கோயில் சுற்றுப்புற பகுதி, ஒய்எம்ஆர்.பட்டி, அண்ணாநகர், எம்விஎம். நகர், ரவுண்ட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சில வீடுகளில் ஃப்ளோ கண்ட்ரோல் வால்வுகள் நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல், ஞானபிரகாசபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி நேரடியாக  தண்ணீர் எடுப்பது கண்டறியப்பட்டது. 
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள்  மீது  நடவடிக்கை  எடுக்கக்கோரி மாநகராட்சி சார்பில் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
ஆனாலும், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளத் தவறிய மாநகராட்சி ஃபிட்டர்கள் மீது இதுவரை துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல் வீட்டின் உரிமையாளர்கள் மீதும், அனுமதியின்றி இணைப்பு ஏற்படுத்தியவர்கள் மீதும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 
 இதன் காரணமாக முறைகேடான வழிகளில் தண்ணீர் பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 
குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், கண்காணிக்கவும் மாநகராட்சி முக்கியத்துவம் அளிக்காதபட்சத்தில்,  ரூ.70.50 கோடி  செலவில் நிறைவேற்றப்பட்ட ஜிக்கா திட்டம் தோல்வி அடைவதோடு, குடிநீர் பிரச்னையும் விஸ்வரூபமாகும் நிலை உள்ளது. 
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர்(பொ) பாலசந்திரன் கூறுகையில், குடிநீருக்காக போராட்டம் நடத்திய 13 மற்றும் 14 ஆவது வார்டுகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், குடிநீர் பிரச்னை உள்ள ஒவ்வொரு பகுதிகளின் மீதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "ஃப்ளோ கண்ட்ரோல்' வால்வுகளை கண்காணிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com