முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
காசோலை மோசடி: நகைக் கடை உரிமையாளருக்கு 6 மாதம் சிறை
By DIN | Published On : 18th May 2019 07:00 AM | Last Updated : 18th May 2019 07:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் ரூ.12 லட்சத்திற்கு காசோலை வழங்கி மோசடியில் ஈடுபட்ட நகைக் கடை உரிமையாளருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் பாலன். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திண்டுக்கல் பெரியக் கடை வீதியில் நகைக் கடை நடத்தி வரும் விஸ்வநாதன் (53) என்பவருக்கு, கடந்த 2012ஆம் ஆண்டு ரூ.12 லட்சம் கடன் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் வகையில் சில மாதங்களுக்கு பின் ரூ.12 லட்சத்திற்கான காசோலையை விஸ்வநாதன் வழங்கியுள்ளார். ஆனால், போதிய பணம் இருப்பு இல்லாமல் அந்த காசோலை திரும்பியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலன், இதுதொடர்பாக திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அதன்பேரில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதலாவது நீதித்துறை நடுவர்மன்ற நீதித்துறை நடுவர் பாலமுருகன் இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், காசோலை மோசடியில் ஈடுபட்ட விஸ்வநாதனுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், உடனடியாக ரூ.12 லட்சத்தை திருப்பி வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.