பழனி தனியார் விடுதியில் இருவர் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 18th May 2019 07:02 AM | Last Updated : 18th May 2019 07:02 AM | அ+அ அ- |

பழனியில் தனியார் விடுதியில் தங்கிய பெண் உள்ளிட்ட இருவர் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சக்திவேல் (41). இவர் அரசு மதுபானக் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சக்திவேலுக்கு நாமக்கல் மாவட்டம், சங்ககிரி தாலுகா கருவேப்பிலைபட்டியைச் சேர்ந்த புஷ்பலதா (25) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. புஷ்பலதா திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தந்தை கந்தசாமியுடன் வசித்து வந்துள்ளார். இருவரின் பழக்கத்தையும் அறிந்த இரு குடும்பத்தினரும் இருவரையும் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், சக்திவேலும், புஷ்பலதாவும் புதன்கிழமை பழனிக்கு வந்து, பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
இதையடுத்து, வியாழக்கிழமை இரவு வரை நீண்ட நேரம் ஆகியும் அறை திறக்காததால், சந்தேகமடைந்த விடுதி பணியாளர்கள் கதவை தட்டியும் அறை திறக்கவில்லை.
இதைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அறையை திறந்து பார்த்தபோது, இருவரும் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.