மாநில அளவிலான பெண்கள் ஹாக்கிப் போட்டி: லீக் சுற்றில் சேலம், ஈரோடு அணிகள் முன்னிலை
By DIN | Published On : 20th May 2019 07:43 AM | Last Updated : 20th May 2019 07:43 AM | அ+அ அ- |

திண்டுக்கல் அருகே நடைபெறும் வரும் மாநில அளவிலான பெண்கள் ஹாக்கிப் போட்டியில், லீக் சுற்றில் சேலம் மற்றும் ஈரோடு கல்லூரி அணிகள் முன்னிலைப் பெற்றுள்ளன.
தயா பெண்கள் ஹாக்கி கிளப் மற்றும் ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி கழகம் சார்பில் முதலாவது மாநில அளவிலான பெண்கள் ஹாக்கிப் போட்டி திண்டுக்கல் அடுத்துள்ள நி.பஞ்சம்பட்டியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் ஈரோடு, சேலம், சென்னை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 8 அணிகள் நாக் -அவுட் சுற்றில் கலந்து கொண்டன.
நி. பஞ்சம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை இன்டஸ் ஹாக்கி கிளப் நிறுவனர் எஸ்.பிரான்சிஸ் ஜோசப் தொடங்கி வைத்தார்.
நாக்-அவுட் சுற்றில் 4 அணிகள் வெளியேற்றப்பட்டு, சேலம் பத்மவாணி மகளிர் கல்லூரி அணி, கோபிச்செட்டிப்பாளையம் பிகேஆர் கல்லூரி அணி, பி.புளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அணி(சத்தியமங்கலம்), மணப்பாறை(திருச்சி) மகளிர் ஹாக்கி அகாதெமி ஆகிய 4 அணிகள் லீக் சுற்றுக்கு தகுதிப் பெற்றன. அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சேலம் பத்மவாணி மகளிர் கல்லூரி மற்றும் மணப்பாறை (திருச்சி) மகளிர் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதின. இதில் 6-1 என்ற கோல்களில் பத்மவாணி மகளிர் கல்லூரி அணி வெற்றிப் பெற்றது. அதன்பின்னர் பி.புளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிகேஆர் கல்லூரி அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில், 4-1 என்ற கோல்களில் பிகேஆர் அணி வெற்றிப் பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் லீக் சுற்றுகளின் முடிவில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.10ஆயிரம், 2ஆம் இடம் பெறும் அணிக்கு ரூ.7ஆயிரம், 3ஆவது இடத்திற்கு ரூ.6ஆயிரம், 4ஆவது இடத்திற்கு ரூ.5ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.