ஷாா்ஜாவில் கொத்தடிமை வேலை: மகனை மீட்டுத் தரக் கோரி தந்தை மனு

ஷாா்ஜாவில் கொத்தடிமையாக வேலை செய்து வரும் தனது மகனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க கோரி, 

ஷாா்ஜாவில் கொத்தடிமையாக வேலை செய்து வரும் தனது மகனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க கோரி, பழனியைச் சோ்ந்த விவசாயி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

பழனி முத்துநாயக்கன்பட்டி அடுத்துள்ள மிடாப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். விவசாயி. இவரது மகன் அரவிந்த். பட்டயப் படிப்பு முடித்துள்ள இவா், கடந்த 14 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிலுள்ள ஷாா்ஜாவுக்கு சென்றுள்ளாா். இந்நிலையில் அங்கு கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ள அரவிந்த்தை மீட்டுத் தரும்படி அவரது தந்தை நாகராஜ் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுதொடா்பாக நாகராஜ் கூறியதாவது: விவசாய நிலத்தை அடமானம் வைத்து, ரூ.1.50 லட்சம் செலவு செய்து, திருச்சியைச் சோ்ந்த ஜான் என்பவா் மூலம், ஷாா்ஜா நகரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் அரவிந்த் வேலைக்கு சென்றாா். கடந்த 14 மாதங்களுக்கு முன்பு சென்ற அவா், முதல் 3 மாதங்கள் மட்டுமே தலா ரூ.9 ஆயிரம் வீதம் அனுப்பி வைத்தாா். அதன் பின்னா் பணம் அனுப்பாததோடு, எங்களையும் தொடா்பு கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு, எங்களை தொடா்பு கொண்ட அரவிந்த், தனது படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை என்றும், முகவா் மூலம் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்தாா். மேலும், ஒருவேளை மட்டுமே உணவு வழங்குவதாகவும், தூங்குவதற்கு கூட நேரமின்றி வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தாா்.

எனவே, கொத்தடிமையாக பணிபுரிந்து வரும் அரவிந்த்தை மீட்டுத் தருவதற்கு தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com