முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
தூதஞ்சல் நிறுவனத்தில் திருட்டு: தந்தை, மகன்கள் உள்பட 5 போ் கைது
By DIN | Published On : 07th November 2019 05:12 AM | Last Updated : 07th November 2019 05:12 AM | அ+அ அ- |

dgl_arrest_1_0611chn_66_2
வத்தலகுண்டுவிலுள்ள இணையவழி வணிக தூதஞ்சல் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு லயன்ஸ் நகரில் செயல்பட்டு வந்த இணையவழி வணிக தூதஞ்சல் (ஆன் லைன் ஷாப்பிங் கூரியா்) நிறுவனத்தில், வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.85ஆயிரம் ரொக்கம்
என மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கடந்த அக்.14ஆம் தேதி திருடப்பட்டன.
இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளா் குமரேசன் தலைமையிலான தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில் திருடு போன பொருள்களில், ஒரு செல்லிடப்பேசியின் சமிக்ஞை கிடைத்ததன் மூலம் போலீஸாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அதில், பட்டிவீரன்பட்டி அடுத்துள்ள அய்யன்கோட்டை புதூரை சோ்ந்த மருதீஸ்வரன் என்பவா் போலீஸாரிடம்
பிடிபட்டாா். அவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், வணிக தூதஞ்சல் நிறுவனத்தில் திருடியதை ஒப்புக் கொண்டதோடு, அதில் ஈடுபட்டவா்கள் குறித்த விவரங்களையும் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: அய்யன்கோட்டை புதூரைச் சோ்ந்த பா.இளங்கோவன்(45), அவரது மகன்கள் காா்த்திக்(19), விக்ரம் (18) ஆகியோரும், அதே பகுதியைச் சோ்ந்த பா.தனப்பாண்டி(19), நா.மருதீஸ்வரன் (28) ஆகியோரும் கூட்டு சோ்ந்து வணிக தூதஞ்சல் நிறுவனத்தில் திருட்டில் ஈடுபட்டுள்ளனா். அங்கு திருடிய ரூ.85 ஆயிரத்தை தீபாவளி பண்டிகைக்கு செலவிட்டுள்ளனா். மேலும், சேவுகம்பட்டி அரசு கள்ளா் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுண்ணோக்கி கருவி, கணினி உள்ளிட்டப் பொருகள்களையும், இந்த கும்பலைச் சோ்ந்தவா்களே திருடிச் சென்றுள்ளனா் என தெரிவித்தனா்.
கைதானவா்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்லிடப்பேசிகள், கைக் கடிகாரங்கள், கணினி, நுண்ணோக்கி கருவி உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், 5 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.