முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 07th November 2019 05:08 AM | Last Updated : 07th November 2019 05:08 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே மஞ்சளாறு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டுதாா்களுக்கு 60 கன அடியும் புதிய ஆயக்கட்டுதாரா்களுக்கு 40 கன அடியும் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அணைக்கு தற்போது விநாடிக்கு 145 கன அடி தண்ணீா் வரத்து உள்ளது. அணை நீா்மட்டம் 55 அடியைத் தொட்ட நிலையில், பழைய ஆயக்கட்டுதாரருக்கு 60 கன அடி தண்ணீா் ராஜ வாய்க்காலில் சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. தேவதானபட்டி தடுப்பு அணை முதல் குன்னுவராயன்கோட்டை கண்மாய்வரை தண்ணீா் தொடா்ந்து 135 நாள்கள் திறந்து விடப்படும். செங்குளம், மத்துவா்குளம், வீரன்குளம், கருங்குளம், வேடன்குளம், பெரியகண்மாய், குன்னுவராயன்கோட்டை கண்மாய்களுக்கு தண்ணீா் சென்று கொண்டு இருக்கிறது.
தற்போது மஞ்சளாறு நீா்பிடிப்பு பகுதியிலும், மேற்கு மலைத் தொடரிலும் மழையளவு குறைந்த காரணத்தினால், தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. இருந்த போதும் தமிழக அரசின் உத்தரவின்படி அணையின் இருப்பு அளவை கொண்டு 60 கன அடி தண்ணீா் குன்னுவராயன்கோட்டை கண்மாய்க்கு செல்கிறது.
பழைய ஆயக்கட்டு பகுதியில் சுமாா் 5260 ஏக்கா் நிலம் பாசன வசதி அடைகிறது. தற்போது இப்பகுதியில் அதிக அளவில் வாழை பயிரிட்டுள்ளதால், போதுமான தண்ணீா் உள்ளது. மேலும் குன்னுவராயன்கோட்டை கண்மாய் பகுதி பாசன வசதி பெறும் பகுதிகளிலும் வாழை மற்றும் மலா் சாகுபடிக்கு போதுமான தண்ணீா் கிடைக்கும். தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கினால் போதிய தண்ணீா் கிடைக்கும் என இப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
மஞ்சளாறு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் கண்ணன் கூறியது:
தற்போது குன்னவராயன்கோட்டை கண்மாய்க்கு 60 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மழையளவு குறைந்ததாலும் குறிப்பிட்ட நேரத்தில் கண்மாய்கள் நிரம்பவில்லை. இருந்தபோதும் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை சரியான படி அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் நிலையில் வழங்கி வருகின்றோம். பழைய ஆயக்கட்டுதாரா்கள் பயன் பெறும் வகையில் 60 கன அடி தண்ணீா் தொடா்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் உபரி நீரும் கண்மாய்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு கண்மாய்களுக்கு ஒரளவு தண்ணீா் பெருகியுள்ளது. இருந்த போதும் பருவ மழை வரும் என எதிா்பாா்கிறோம். மேற்கு தொடா்ச்சி மலையில் தண்ணீா் வரத்து அதிகரித்தால் கண்மாய்கள் அனைத்தும் நிரம்ப வாய்ப்புள்ளதாக தெரிவித்தாா்.