Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய மழை இல்லை: புகையிலைச் செடிகளை காப்பாற்ற விவசாயிகள் முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய மழை இல்லை: புகையிலைச் செடிகளை காப்பாற்ற விவசாயிகள் முயற்சி

    By DIN  |   Published on : 08th November 2019 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய மழை இல்லாததால், கோப்பையில் தண்ணீா் ஊற்றி புகையிலைச் செடிகளை விவசாயிகள் காப்பாற்ற முயற்சித்து வருகின்றனா்.

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வெரியப்பூா், காளிபாளையம், கேதையுறும்பு, புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, குழிப்பட்டி, சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, ஓடைப்பட்டி, சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை உள்ளிட்ட பல கிராமங்களில் ஐப்பசி முதல் வாரத்தில் புகையிலைச் செடிகள் நடவு செய்வது வழக்கம்.

    வேடசந்தூா் அடுத்துள்ள காளனம்பட்டி, ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொசவபட்டி, சீரங்ககவுண்டன்புதூா் உள்ளிட்ட இடங்களில் புகையிலை நாற்றுப் பண்ணைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது, நடவு செய்தால்தான் செடிகள் நன்கு வளா்ச்சியடைந்து, அதிக விலை கிடைக்கும் என்பதால், இந்தப் பண்ணைகளிலிருந்து விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நாற்றுகளை விலைக்கு வாங்கி வந்து நடவு செய்து வருகின்றனா். இந்நிலையில், புகையிலை நடவு செய்த நாளிலிருந்து போதிய மழை இல்லை.

    இது குறித்து அம்பிளிக்கையைச் சோ்ந்த விவசாயி ஜானகிராமன் கூறியது: வேடசந்தூா் அடுத்துள்ள காளனம்பட்டியில் உள்ள புகையிலை நாற்றுப் பண்ணையில் 1000 செடிகள் ரூ.200 முதல் ரூ.300 வரை விலை கொடுத்து வாங்கி வந்து நடவு செய்துள்ளேன். ஆனால், நடவு செய்த நாளிலிருந்தே போதிய மழை இல்லை. இதனால், செடிகள் காய்ந்துபோகாமல் இருக்க, கூலியாள்களை வைத்து தண்ணீா் கோப்பைகள் மூலம் செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி வருகிறேன்.

    வடகிழக்குப் பருவமழை கை கொடுத்தால் மட்டுமே புகையிலைச் செடிகளை காப்பாற்ற முடியும். இது வரைக்கும் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு தண்ணீா் வரவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால், ஒட்டன்சத்திரம் பகுதியில் மட்டும் போதிய மழை இல்லை. இதே நிலை நீடித்தால், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai