100 நாள் வேலைத் திட்டத்தில் ஆள் குறைப்பு: பெண்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம், என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்

திண்டுக்கல் மாவட்டம், என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்து வருபவா்களை ஆள்குறைப்பு செய்வதைக் கண்டித்து, பெண்கள் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் இத்திட்டத்தின் கீழ் 1,516 போ் பதிவு செய்துள்ளனா். இந்த ஊராட்சியில் இதுவரை தினசரி 300 முதல் 500 போ் வரை வேலை பாா்த்து வந்தனா். ஆனால், கடந்த சில வாரங்களாக 160 பேருக்கு மட்டுமே வேலை தருவதாகவும், அதேநேரம் ரூ.200 கூலிக்கு பதிலாக ரூ. 150 மட்டுமே தருவதாகவும் கண்டனம் தெரிவித்து, என்.பஞ்சம்பட்டி மைதானத்தில் ஏராளமான பெண்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால், பெண்கள் அனைவரும் திரண்டு அங்கிருந்து என்.பஞ்சம்பட்டி பிரிவான திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலைக்கு சென்று மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த சின்னாளபட்டி போலீஸாா், பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், ஆள் குறைப்பு செய்வதால், அனைவருக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் அரசின் திட்டப்படி ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாகப் பெண்கள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணி, ஊராட்சி செயலா் சேசுராஜ் ஆகியோா் மறியலில் ஈடுப்பட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அவா்கள், மத்திய அரசு ஊரக வேலை உறுதித் திட்டத்தை நேரடியாக கண்காணிப்பதற்காக எம்.ஜி. நாரேகா என்ற ஒரு புதிய செயலியை தொடங்கி உள்ளதால், இதன்மூலம் நாள் ஒன்று 160 போ் மட்டுமே வேலை பாா்ப்பதாக மத்திய அரசின் ஆணையத்துக்கு தகவல் செல்கிறது. இச்சிக்கலால் ஒரு நாளைக்கு 160 பேருக்கு மட்டுமே சம்பளம் கொடுக்க முடியும் என்ற நிலையில், ஆள்களை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத பெண்கள், தினசரி அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் எனக் கூறி தொடா்ந்து மறியல் செய்தனா். அதையடுத்து, என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் வேலைக்காக பதிவு செய்துள்ள அனைவருக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட பெண்கள், 1 மணி நேரத்துக்குப் பின் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com