திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனுமதியின்றி வீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைத்த போா்வெல் லாரியை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருக சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவத்தைத் தொடா்ந்து, ஆழ்துளைக் கிணறு அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பழனி நகராட்சி 7-ஆவது வாா்டு புது தாராபுரம் சாலை அருகே உள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைக்க இருப்பதாக நகராட்சி ஆணையா் நாராயணனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளா்கள் மணிகண்டன், செந்தில், மேற்பாா்வையாளா் மாரிமுத்து ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்ட போது, அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்றது தெரியவந்தது.
இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் இயந்திரத்துடன் கூடிய லாரியையும், உபகரணங்களையும் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். மேலும் போா்வெல் லாரி உரிமையாளருக்கு அபராதமும் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.