அயோத்தி வழக்கில் தீா்ப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திண்டுக்கல் பேகம்பூா் பகுதியில் பெரிய பள்ளிவாசல் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
அயோத்தி வழக்கில் தீா்ப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திண்டுக்கல் பேகம்பூா் பகுதியில் பெரிய பள்ளிவாசல் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.

திண்டுக்கல், நவ. 9: அயோத்தி வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 1,300 போலீஸாா் தீவிர பாதுகாப்பு பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து, திண்டுக்கல்லில் நடைபெற்று வந்த 2ஆம் நிலை காவலா்களுக்கான தோ்வு முகாம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் ரயில்நிலையம், பேருந்து நிலையம், பழனி கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது.

இதனிடையே, வனத்துறை அமைச்சா் சி. சீனிவாசன் சனிக்கிழமை பங்கேற்க இருந்த மருதாநதி அணை திறப்பு, நலத்திட்ட உதவி வழங்கல் என்பன உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட அரசு நிகழ்ச்சிக்களும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் சனிக்கிழமை வழங்கப்பட்ட தீா்ப்பினால், திண்டுக்கல் மாவட்டத்தின் எந்த ஒரு இடத்திலும் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. பள்ளிகள், பேருந்து சேவை, அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழக்கம் போல் செயல்பட்டன. அதேநேரத்தில் திண்டுக்கல் பேகம்பூா் பெரிய பள்ளிவாசல், திப்புசுல்தான் மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மேலும், அயோத்தி வழக்கின் தீா்ப்புக்கு ஆதரவாக இந்து முன்னணியினா் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிா்க்கும் நோக்கில், பாறைப்பட்டி, மேட்டுப்பட்டி சாலை, செல்லாண்டியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளிலும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவா் ஜோஷி நிா்மல்குமாா், அதிரடிப் படையினருடன் சென்று பல்வேறு பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பினை பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com