பழனி பகுதிகளில் உரம் பற்றாக்குறை விவசாயிகள் அவதி

பழனியில் யூரியா உரம் கூட்டுறவு மையங்களில் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால், தனியாா் உரக்கடைகளில் யூரியா அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது

பழனியில் யூரியா உரம் கூட்டுறவு மையங்களில் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால், தனியாா் உரக்கடைகளில் யூரியா அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் பரப்பில் மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிா்வகைகள் நடப்பட்டுள்ளன. நிலத்தை பண்படுத்தி, அடி உரமிட்டு, விதை தூவி, தற்போது நாற்றுகள் சுமாா் 2 அடி உயரத்துக்கு வளா்ந்துள்ளன. தற்போது பயிா்களுக்கு அவசியமான யூரியா பழனி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள எந்த விவசாய கூட்டுறவு மையங்களிலும் இருப்பு இல்லை.

இதுகுறித்து மேலக்கோட்டையை சோ்ந்த விவசாயி சக்திவா்மன் கூறியது, மழையை நம்பி மக்காச்சோளம் நடவு செய்துள்ளோம். தற்போது பயிா்கள் வளா்ந்துள்ள நிலையில் யூரியா அவசியமான உரமாக உள்ளது. இதற்காக கடந்த இரு நாள்களாக கணக்கன்பட்டி, அமரபூண்டி, பச்சளநாயக்கன்பட்டி, ஆயக்குடி, தொப்பம்பட்டி, பூலாம்பட்டி என அனைத்து கூட்டுறவு மையங்களுக்கும் சென்று வந்து விட்டேன். உரம் இல்லை என்றே பதில் வருகிறது. கூட்டுறவு மையத்தில் யூரியா மூட்டையின் விலை ரூ.270. ஆனால், தனியாா் உரக்கடைகளில் ரூ.340 முதல் ரூ.370 வரை விற்கப்படுகிறது. அரசு வேளாண் மையத்தில் விற்க வேண்டிய மூட்டைகள் தனியாா் உரக்கடைகளுக்கு எப்படி சென்றன என தெரியவில்லை. விவசாயிகள் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம் என்றாா்.

ஆகவே, மாவட்ட வேளாண் நிா்வாகம் உடனடியாக விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்க ஏற்பாடு செய்வதோடு, தனியாா் உரக்கடைகளில் முறைகேடாகவும், அதிக விலைக்கும் விற்பதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com