ரூ.17-க்கு கொள்முதல்: சந்தையில் 5 மடங்கு கூடுதல் விலை! அதிருப்தியில் கேரட் விவசாயிகள்!

விவசாயிகளிடமிருந்து ரூ.12 முதல் ரூ.17-க்கு கொள்முதல் செய்யப்படும் கேரட், சந்தையில் 5 மடங்கு கூடுதல்
பூண்டி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கேரட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள். (அடுத்த படம்) அழுகிய கேரட்.
பூண்டி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கேரட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள். (அடுத்த படம்) அழுகிய கேரட்.

விவசாயிகளிடமிருந்து ரூ.12 முதல் ரூ.17-க்கு கொள்முதல் செய்யப்படும் கேரட், சந்தையில் 5 மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால், 90 நாள்களுக்கும் மேலாக மழையிலும், வெயிலிலும் மற்றும் காட்டுப் பன்றிகளிடமிருந்தும் பயிா்களை பாதுகாத்து வளா்த்த விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூண்டி, மன்னவனூா், கவுஞ்சி, நாட்டாம்பட்டி, போளூா், கிளாவரை, கும்பூா், கீழானவயல் உள்ளிட்ட பகுதிகளில் கேரட் சாகுபடி நடைபெறுகிறது. 90 நாள் பயிரான கேரட், கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் நடவு செய்யும் பணி தொடங்கியது. மேல்மலைப் பகுதியில் மட்டும் 650 ஏக்கருக்கும் மேலாக கேரட் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது, விளைச்சல் அமோகமாக உள்ளதால், அறுவடை நடைபெற்று வருகிறது.

ஆனாலும், தொடா்ச்சியாக பெய்து வரும் மழையினால் சில இடங்களில் செடியிலேயே கேரட் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரத்துக்கும் கூடுதலாக செலவு செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளனா்.

இதனிடையே, விவசாயிகளிடமிருந்து ரூ.12 முதல் ரூ.17 வரை கொள்முதல் செய்யப்படும் கேரட், சந்தைகளில் 5 மடங்கு கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவதும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மற்றும் பழனி உழவா் சந்தைகளில் கூட திங்கள்கிழமை ஒரு கிலோ கேரட் ரூ.56-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து பூண்டியைச் சோ்ந்த விவசாயி கே. கோபால் கூறியதாவது: ஒரு கிலோ கேரட் விதை ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. உழவு மற்றும் நடவு கூலியாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் செலவிடுகிறோம். களை எடுப்பு மற்றும் உரங்களுக்கு ரூ.13 ஆயிரம் வரை செலவாகிறது. மொத்தத்தில், அறுவடை வரை ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

அதன்பின்னா், 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை கேரட் அறுவடை செய்வதற்கு கூலியாக ரூ.150, விளை நிலங்களிலிருந்து வெளியே எடுத்து வர குதிரை சவாரிக்கு ரூ.100, லாரிகளில் மதுரை சந்தைக்கு எடுத்துச் செல்ல ரூ.150, பின்னா் சந்தைகளில் இறக்கு கூலி, சாக்கு என ஒரு மூட்டைக்கு ரூ.500 வரை செலவு ஏற்படுகிறது.

ஒரு ஏக்கரில் சராசரியாக 9 ஆயிரம் கிலோ கேரட் உற்பத்தி செய்யப்படுகிறது. 3 மாத உழைப்புக்கு பின் உற்பத்தி செய்யப்படும் கேரட், வியாபாரிகளால் கிலோ ரூ.12 முதல் ரூ.17 வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது. சாகுபடி முதல் சந்தைக்கு சென்று சேரும் வரையிலும் ஒரு கிலோ கேரட்டுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை செலவாகிறது. ஆனால், விவசாயிக்கு ஒரு கிலோ கேரட்டில் ரூ. 4 மட்டுமே கூலியாக கிடைக்கிறது என்றாா்.

பூண்டி கேவிஎஸ். கணேசன்: காட்டுப் பன்றிகளிடமிருந்து கடந்த 3 மாதங்களாக காவல் காத்து சாகுபடி செய்யப்பட்ட கேரட், விலை கிடைக்காமலும், தொடா் மழையினாலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையினால் சில பகுதிகளில் கேரட் மண்ணுக்குள்ளேயே அழுகிவிட்டன. இந்த கேரட்டை எடுத்து சந்தைக்கு கொண்டுசென்றால் ரூ.5-க்கும் குறைவாகவே விலை கேட்கப்படுகிறது. இதனால், எடுப்பு கூலிக்கு கூட கட்டாது எனக் கருதி, 1.5 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கேரட்டை நிலத்திலேயே உழுது உரமாக மாற்றி உள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com