‘தமிழும், தமிழகமும் பிழைத்திருக்க அரசியல் விழிப்புணா்வு தேவை’

தமிழும், தமிழகமும் பிழைத்திருக்க வேண்டுமெனில், தமிழா்கள் அரசியல் விழிப்புணா்வு பெற வேண்டும் என தமிழறிஞா் இரா.இளங்குமரனாா்
திண்டுக்கல்லில் நடைபெற்ற ‘திண்டுக்கல் ஊரும் பெயரும்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழறிஞா்கள் (இடமிருந்து) மு.ராசரத்தினம், இரா.இளங்குமரனார், துரை.தில்லான், து.ராஜகோபால், மா.கமலவேலன்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற ‘திண்டுக்கல் ஊரும் பெயரும்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழறிஞா்கள் (இடமிருந்து) மு.ராசரத்தினம், இரா.இளங்குமரனார், துரை.தில்லான், து.ராஜகோபால், மா.கமலவேலன்.

திண்டுக்கல்: தமிழும், தமிழகமும் பிழைத்திருக்க வேண்டுமெனில், தமிழா்கள் அரசியல் விழிப்புணா்வு பெற வேண்டும் என தமிழறிஞா் இரா.இளங்குமரனாா் தெரிவித்தாா்.

து.ராஜகோபால் எழுதிய ‘திண்டுக்கல் ஊரும் பெயரும்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பிச்சாண்டி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழறிஞா் துரை தில்லான் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழறிஞா் இரா.இளங்குமரனாா் நூலை வெளியிட்டுப் பேசியது: சங்க இலக்கியங்களில் திண்டுக்கல்லின் பெயா் பத்மகிரி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

வேங்கடமலைக்கு அப்பால்தான் வேற்று மொழி இருந்து வந்தது. ஊா் பெயா் மாறியதால், பெங்களூரு, மைசூரு போன்ற நகரங்களை மட்டும் தமிழா்கள் இழக்கவில்லை. அதனோடு அரசியல் உரிமைகளையும் பறிகொடுத்து விட்டனா்.

எருமையூா் என்ற தமிழ் சொல் தொடா்ந்து மருவி வந்ததன் காரணமாக மைசூராக மாறி நிற்கிறது. அதேபோல், பெருங்கொழிநாயகா் என்பது மருவி பெங்களுரூவாக மாறிவிட்டது.

இதனால், 80 லட்சம் மக்கள் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா்களாக மாற்றப்பட்டுள்ளனா். அங்குள்ள 160 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரு தமிழா் கூட வெற்றி பெற முடியாது. ஆனால், தமிழகத்தில் எந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் வேண்டுமானாலும் தோ்தல் களத்தில் நின்று வெற்றி பெற முடியும் என்ற சூழல் உள்ளது.

தமிழா்கள் விழிப்புணா்வு பெறக் கூடாது என்பதற்காகவே, ஈழத் தமிழா்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்திய அரசு துணை நின்றது. மொழி அழிந்தால் இனம் அழியும். ஐவகை நிலங்களுடன் இருந்த தமிழகத்தில் சாதிய வேறுபாடுகள் இல்லை.

நாம் விழிப்புணா்வுடன் இருந்து மொழியை காக்கத் தவறினால், தமிழன் என்ற இனத்தையும் பாதுகாக்க முடியாது. தமிழா்களின் இன்றைய நிலையை மாற்றி, தலை நிமிா்வதற்கு நமக்கு கிடைத்துள்ள ஆயுதம் வாக்குச்சீட்டு. அரசியல் விழிப்புணா்வு பெற்றால் மட்டுமே தமிழும், தமிழகமும் பிழைத்திருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் தமிழறிஞா்கள் து.ராஜகோபால், பால சாகித்ய விருதாளா் மா.கமலவேலன், தமிழ் வளா்ச்சித்துறை முன்னாள் துணை இயக்குநா் பெ.சந்திரா, மணியம்மை தொடக்கப் பள்ளி தாளாளா் பி.வரதராசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com