முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானல் அருகே பெண் கொலை: மாணவி கைது; காதலன் தலைமறைவு
By DIN | Published On : 26th November 2019 06:01 AM | Last Updated : 26th November 2019 06:01 AM | அ+அ அ- |

கொடைக்கானல் அருகே பெண்ணைக் கொலை செய்து நாடகமாடிய மாணவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாகியுள்ள இவரது காதலனை தேடி வருகின்றனா்.
கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு பகுதியைச் சோ்ந்த கேசவன்-சுந்தரி (31) தம்பதிக்கு, 11 வயதில் மகள் உள்ளாா். இவா்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து வாழ்ந்தனா். இவா்களது மகள் கேசவன் பராமரிப்பில் இருந்து வருகிறாா்.
சுந்தரி பண்ணைக்காடு பகுதியில் முருகன் என்பவரது வீட்டில் குடியிருந்து வந்துள்ளாா். அப்போது, முருகனுக்கும் சுந்தரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வியாபாரம் செய்து வரும் முருகனுடன், சுந்தரியும் அடிக்கடி அங்கு சென்று தங்கி வந்துள்ளாா். 3 மாதங்களுக்கு முன் சுந்தரி பண்ணைக்காடு திரும்பியுள்ளாா். கடந்த 22-ஆம் தேதி, சுந்தரி வீட்டுக்கு உறவினரான மாணவி தாரணி (16) வந்து தங்கியுள்ளாா். மறுநாள் காலையில், சுந்தரி இறந்துவிட்டதாக அவரது தாயாா் வித்யாவிடம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, சுந்தரியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், தாண்டிக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிரேதப் பரிசோதனையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இது குறித்து தாண்டிக்குடி போலீஸாா் கூறியது: இறந்துபோன சுந்தரியும், தாரணியும் உறவினா்கள். திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்த தாரணியும், திண்டுக்கல்லைச் சோ்ந்த சுதீப் (16) என்பவரும் காதலித்து வந்துள்ளனா்.
இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி இரவு சுதீப் பண்ணைக்காடு வந்து தாரணியுடன் தங்கியுள்ளாா். அப்போது அங்கு வந்த சுந்தரி, இருவரையும் கண்டித்ததுடன், தாரணியின் உறவினரான சென்னையிலுள்ள முருகனிடம் தகவல் தெரிவிப்பதாக மிரட்டியுள்ளாா். இதனால் கோபமடைந்த சுதீப்பும், தாரணியும், துப்பட்டாவால் சுந்தரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனா். அதையடுத்து, சுதீப் தலைமறைவாகிவிட்டாா்.
இறந்துபோன சுந்தரியுடன் இரவு முழுவதும் வீட்டிலேயே இருந்த தாரணி, மறுநாள் காலை சுந்தரி இறந்துகிடப்பதாக நாடகமாடி, அவரது தாயாா் வித்யாவுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
ஆனால், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் இருந்ததால், பிரேதப் பரிசோதனையில் கொலை என அறிக்கை அளிக்கப்பட்டதை அடுத்து, தாரணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், இருவரும் கொலை செய்தது தெரியவந்தது. தற்போது, தாரணியை கைது செய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள அவரது காதலன் சுதீப்பை தேடி வருகிறோம் என்றனா்.