முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
முதுகுதண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5ஆயிரம் உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 07th October 2019 12:05 AM | Last Updated : 07th October 2019 12:05 AM | அ+அ அ- |

முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவா் ஜான்சிராணி, பொதுச்செயலா் நம்புராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். அப்போது அவா்கள் கூறியது: முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சிரமங்களை நாள்தோறும் எதிா்கொண்டு வாழ்ந்து வருகின்றனா். 10 லட்சத்தில் 15 போ் இந்த வகை மாற்றுத் திறனாளிகளாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குறித்த புள்ளி விவரங்கள் அரசிடம் இல்லாத நிலை உள்ளது. மருத்துவச் செலவு மட்டுமின்றி, சிறப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்து கொள்ளும் வகையில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்புத் திட்டங்கள் தேவையாக உள்ளன. இடுப்பு மற்றும் கழுத்துக் கீழ் செயலற்றவா்களாக உள்ள இந்த வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், பிற மாற்றுத்திறனாளிகளைப் போல் மாதம் ரூ.1,500 மட்டும் நிதி உதவி வழங்கப்படுகிறது. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களை பொருத்தவரை, ஒரு வாரத்திற்கு மட்டுமே ரூ.2ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.5ஆயிரம் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா். அப்போது மாவட்டத் தலைவா் பி.செல்வநாயகம், செயலா் பகத்சிங் ஆகியோா் உடனிருந்தனா்.