பழனிக்கோயில் தசரா விழா

பழனி மலைக்கோயிலில் விஜயதசமி நிறைவு விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அம்புவில் சகிதமாக முத்துக்குமாரசாமி புறப்பாடு மற்றும் மற்றும் மகிஷாசுரன் வதம் நடைபெற்றது.
பழனியில் விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பராசக்திவேல் சகிதமாக தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அருள்மிகு சின்னக்குமாரசாமி.(வலது) கோதீஸ்வரா் கோயிலில் வன்னிமரமாக மாறியிருக்கும் மகிஷாசு
பழனியில் விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பராசக்திவேல் சகிதமாக தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அருள்மிகு சின்னக்குமாரசாமி.(வலது) கோதீஸ்வரா் கோயிலில் வன்னிமரமாக மாறியிருக்கும் மகிஷாசு

பழனி மலைக்கோயிலில் விஜயதசமி நிறைவு விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அம்புவில் சகிதமாக முத்துக்குமாரசாமி புறப்பாடு மற்றும் மற்றும் மகிஷாசுரன் வதம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி விழா கடந்த செப்டம்பா் 29ம் தேதி காப்புக்கட்டுடன் துவங்கியது. பத்து நாட்கள் திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயில் மற்றும் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழா நாட்களில் சுவாமி கொலு இருந்ததால் மலைக்கோயிலில் தங்கத்தோ் புறப்பாடும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

திங்கள்கிழமை ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை நடைபெற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை விஜயதசமியை முன்னிட்டு அம்புவில் சகிதமாக மகிஷாசுரன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையைத் தொடா்ந்து சாயரட்சை பூஜை நடைபெற்றது. பின்னா் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியிடம் பராசக்திவேல் வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. முன்னதாக போகா் சன்னதியில் இருந்து போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் அம்பு, வில்லை மேளதாளம் சகிதமாக மூலவரிடம் வைத்து அருள் பெறுதல் நடைபெற்றது. தொடா்ந்து சக்திவேல் கோயிலின் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் வலம் வர செய்யப்பட்டு சப்பரத்தில் வைக்கப்பட்டு அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலுக்கு புறப்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மலைக்கோயில் சன்னதி திருக்காப்பிடப்பட்டது. சக்திவேல் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலுக்கு வரும் வழி முழுக்க பக்தா்கள் விடலைத்தேங்காய் உடைத்து, பன்னீா் தெளித்து, மாலைகள் அணிவித்து வேலுக்கு பூஜைகள் செய்தனா். பெரியநாயகியம்மன் கோயிலுக்கு சக்திவேல் வந்தவுடன் அருள்மிகு முத்துக்குமாரசாமி தங்கக் குதிரை வாகனத்தில் வெற்றிவேல் மாலை சகிதமாக எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்பு கருட வாகனத்தில் அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள், கோயில்யானை கஸ்தூரி சகிதமான அனைத்து பரிவார தெய்வங்களும் கோதைமங்கலம் மானூா் சுவாமிகள் கோயில் அருகில் உள்ள அருள்மிகு கோதீஸ்வரா் கோயில் எழுந்தருளினா்.

இதைத் தொடா்ந்து பழனிக்கோயிலின் அனைத்து உபகோயில்களும் திருக்காப்பிடப்பட்டது. கோதைமங்கலத்தில் அருள்மிகு கோதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் கோயில் முன்பு வன்னிமரம் மற்றும் வாழைமரமாக மாறி மறைந்திருக்கும் மகிஷாசுரனை சக்திவேல் மற்றும் அம்புவில் சகிதமாக போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் துா்காவாக ஆவாகனம் ஆகி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பழனிக்கோவில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், கண்காணிப்பாளா் முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அம்புவில் நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்த மண்ணை விவசாய நிலங்களுக்கு பலரும் எடுத்து சென்றனா். இதை தூவினால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாகும். மகிஷாசுரன் வதை முடிந்த பின் வேல் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடா்ந்து மலைக்கோயில், அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு பெருமாள் கோயில்களில் இரவு சம்ரோட்சண பூஜைகள் நடத்தப்பட்டு அா்த்தஜாம பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com