ஆயத்த ஆடைகள்  விற்பனை: 50% வீழ்ச்சி! உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கவலை

தீபாவளி பண்டிகைக்காக நத்தம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஆயத்த ஆடைகள் விற்பனை
ஆயத்த ஆடைகள்  விற்பனை: 50% வீழ்ச்சி! உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கவலை

தீபாவளி பண்டிகைக்காக நத்தம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஆயத்த ஆடைகள் விற்பனை 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால், உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் கவலை அடைந்துள்ளனர். 
       திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் தயார் செய்யப்படும் ஆயத்த ஆடைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஆண்டு முழுவதும் இத்தொழில் நடைபெற்று வந்தாலும், தீபாவளி பண்டிகையை மட்டுமே உற்பத்தியாளர்கள் பிரதானமாக எதிர்பார்க்கின்றனர். 
      நத்தம் பகுதியில் சுமார் 200 உற்பத்தியாளர்கள் உள்ள நிலையில், நத்தம், சிறுகுடி, கோட்டையூர், புதுப்பட்டி, பரளி, வத்திப்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் இத்தொழில் அமைந்துள்ளது. இங்கு, 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலிஸ்டர், காட்டன், மோனோ காட்டன், பிளாஃபில், ரேமண்ட் காட்டன் ஆகிய ரக துணிகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆயத்த ஆடைகள் ரூ.110 முதல் ரூ.250 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
     மதுரை, தேனி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சேலம், விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
     நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்காக, ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தன. ஆனால், தற்போது தீபாவளிக்கு சில நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆயத்த ஆடைகள் விற்பனையாகவில்லை எனக் கூறப்படுகிறது.
     தற்போது வரையிலும் 50 சதவீத சரக்குகள் மட்டுமே வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 50 சதவீத சரக்குகள் தேக்கம் அடைந்துள்ள நிலையில், தீபாவளிக்கு 4 நாள்களுக்கு முன்பு நடைபெறும் கடைசி கட்ட விற்பனை கைகொடுத்தால் மட்டுமே உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, தொழிலாளர்களும் மீளமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. 
     இது தொடர்பாக ஆயத்த ஆடை உற்பத்தியாளர் எஸ். அப்பாஸ் தெரிவித்ததாவது: நத்தம் பகுதியில் ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தாலும், ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் சுமார் 4 லட்சம் சட்டைகளை வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் செல்வது வழக்கம். 
    நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு குறைந்த விலையில் சட்டைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதால், நத்தம் ஆயத்த ஆடை சந்தை முக்கியத்துவம் பெற்று வந்தது. ஆனால், இந்த ஆண்டில் இதுவரையிலும் 50 சதவீத சரக்குகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், கடன் வாங்கி இத்தொழிலில் முதலீடு செய்துள்ள 70 சதவீத வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. 
      இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜிஎஸ்டி பிரச்னை எழுந்தபோது கூட இதுபோன்ற பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.
      உற்பத்தியாளர் பி.கோகுல் கூறியது: கடந்த 7 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். 3 ஆண்டுகளுக்கு முன் கடுமையான வறட்சி ஏற்பட்டபோதிலும் கூட, இந்த அளவுக்கு சரக்குகள் தேக்கம் அடையவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு 25 ஆயிரம் சட்டைகளும், 2018 இல் 20ஆயிரம் சட்டைகளும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டில் இதுவரையிலும் சுமார் 8 ஆயிரம் சட்டைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில் இன்னும் 2 ஆயிரம் சட்டைகள் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கிறோம். 
     நிகழாண்டு விற்பனை 50 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இதே நிலைதான், பிற உற்பத்தியாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சரக்குகள் தேக்கத்தால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடி,  இத்தொழிலை நம்பியுள்ள 4 ஆயிரம் குடும்பங்களையும் பாதிக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com