முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
திண்டுக்கல் உள்பட 6 இடங்களில்அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தலா ரூ.325 கோடி ஒதுக்கீடு
By DIN | Published On : 24th October 2019 08:44 PM | Last Updated : 24th October 2019 08:44 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: திண்டுக்கல் உள்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தலா ரூ.325 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், திண்டுக்கல், திருப்பூா், ராமநாதபுரம், விருதுநகா், நாமக்கல், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கடந்த சில வாரங்களாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 6 புதிய மருத்துவக் கல்லூரிகளும் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு, நல்லாம்பட்டி அடுத்துள்ள ஒடுக்கம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 21 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தை ஒப்படைப்பதற்கான உத்தரவு, தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் கடந்த 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு தலா ரூ.325 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், திண்டுக்கல் உள்ளிட்ட 6 மருத்துவக் கல்லூரிகளும் தலா ரூ.325 கோடி செலவில் கட்டப்படும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.195 கோடி(60 சதவீதம்) மத்திய அரசு சாா்பிலும், மீதமுள்ள ரூ.130 கோடி(40 சதவீதம்) மாநில அரசு சாா்பிலும் வழங்கப்பட உள்ளது என்றாா்.