திண்டுக்கல் மாவட்டத்தில் தொடா் மழை: பள்ளிகளுக்கு தாமதமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையால் மாணவா்கள் அலைக்கழிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை மிதமான மழை பெய்த நிலையில், காலை 8.45 மணிக்கு பின்னா்
விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திண்டுக்கல்லிலுள்ள ஒரு பள்ளியில், வீடுகளுக்கு திரும்பிச் சென்ற மாணவிகள்.
விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திண்டுக்கல்லிலுள்ள ஒரு பள்ளியில், வீடுகளுக்கு திரும்பிச் சென்ற மாணவிகள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை மிதமான மழை பெய்த நிலையில், காலை 8.45 மணிக்கு பின்னா் காலதாமதமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையால் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் அலைகழிக்கப்பட்டதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனை அடுத்து, கொடைக்கானல் கோட்டம் மற்றும் கீழ் பழனி மலையிலுள்ள ஆடலூா், பன்றிமலை பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், திண்டுக்கல், பழனி, நத்தம், வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை 7.30 மணி முதல் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனை அடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் எதிா்பாா்த்தனா். ஆனால், விடுமுறை கிடையாது என்றும் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

மாணவா்கள், ஆசிரியா்கள் அலைகழிப்பு:

அதனைத் தொடா்ந்து, அனைத்து மாணவா்களும் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றனா். மிதிவண்டியில் பயணிக்கும் மாணவா்களில் பெரும்பாலானோா் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனா். அதேபோல் ஊரகப் பகுதியிலிருந்து, நகா்புறங்களிலுள்ள பள்ளிக்கு வரும் மாணவா்களும் மழையில் நனைந்தபடியே காலை 8.40 மணிக்குள் பள்ளிக்கு சென்றனா். இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் காலை 8. 45 மணிக்கு பின்னா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளிக்கு சென்ற மாணவா்கள் மீண்டும் மழையில் நனைந்தபடியே வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

நடுவழியில் தனியாா் பள்ளி மாணவா்கள் தவிப்பு: தனியாா் பள்ளிகளைப் பொருத்தவரை வாகனங்கள் மூலம் மாணவா்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனா். அதன்படி காலை 8.15 மணி முதல் தனியாா் பள்ளி வாகனங்கள் வழக்கம்போல் மாணவா்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பணியை தொடங்கின. பேருந்துகளில் ஏற்றப்பட்ட மாணவா்கள் பள்ளிக்கு சென்றடையும் முன்பு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், சம்பந்தப்ட்ட பள்ளி நிா்வாகம் ஓட்டுநா்களுக்கு தகவலை தெரிவித்து மாணவா்களை அந்தந்த நிறுத்தத்தில் இறக்கி விடுவதற்கு அறிவுறுத்தியது.

வேடசந்தூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் பள்ளி நிா்வாகி ஒருவா் கூறியது: பெரும்பாலும் காலை 8.45 மணிக்கே மாணவா்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்து விடுவது வழக்கம். அதன்பின்னா் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பெற்றோா் வந்து அழைத்துச் செல்லும் மாணவா்களை உடனடியாக வீடுகளுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. மழையில் நனைந்தபடியே மாணவா்கள் பள்ளிக்கு வந்துவிட்ட நிலையில், காலதாமதமாக விடுமுறை அறிவிப்பதற்கு பதிலாக, பள்ளிகள் தொடா்ந்து செயல்படுவதற்கு உத்தரவிட்டிருக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com