கொடைக்கானல் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
By DIN | Published On : 11th September 2019 07:53 AM | Last Updated : 11th September 2019 07:53 AM | அ+அ அ- |

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான வடகவுஞ்சி, பேத்துப்பாறை, மங்களம் கொம்பு, வெள்ளப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலைச்சாலைகளிலும், விவசாயத் தோட்டங்களிலும் தற்போது காட்டு யானை புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பேத்துப்பாறையைச் சேர்ந்த பாபு என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த ஒற்றைக் காட்டு யானை மலைச்சாலையோரமாக நின்று பிளறி உள்ளது. இதனைக் கண்ட பாபு அங்கிருந்து விரைவாக சென்றுவிட்டார். யானைகள் தற்போது அடிக்கடி வனப் பகுதிகளை ஓட்டியுள்ள விவசாயப் பகுதிகளுக்கு உணவு தேடி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர்.
இது குறித்து கொடைக்கானல் வனத் துறையினர் கூறியதாவது: கொடைக்கானலில் தற்போது பலாப் பழம் சீசன் நிலவி வருகிறது. இதனால் வனப் பகுதியையொட்டியுள்ள நிலங்களுக்குள் யானைகள் புகுகின்றன. இருப்பினும் வனத்துறையினர் பல்வேறு இடங்களில் முகாமிட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
இது குறித்து பேத்துப்பாறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது: பேத்துப்பாறை, வெள்ளைப்பாறை பகுதிகளுக்கு தற்போது அதிகளவில் காட்டு யானைகள் வருகின்றன. இதனால் வெளியில் செல்வதற்கு அச்சமாக உள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் யாரும் வெளியே வருவதில்லை. தோட்டங்களில் காவல் காப்பதற்கும் செல்வதில்லை. வனத் துறையினர் காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டவும், மின் வேலி அமைத்துக் கொடுக்கவும் முன்வர வேண்டும் என்றனர்.