திண்டுக்கல்லில் கட்டுமானத்துக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணுக்குள் பெண் சிசு சடலம்
By DIN | Published On : 11th September 2019 07:55 AM | Last Updated : 11th September 2019 07:55 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் கட்டடம் கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணுக்குள், பெண் சிசுவின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே, தனியார் தேநீர் விடுதி கட்டுமானப் பணிகளுக்காக மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை பணிக்கு வந்த கட்டடத் தொழிலாளர்கள், மணலை மண் வெட்டியில் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது மணலுக்குள் பெண் சிசுவின் சடலம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், குறை பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை உயிரிழந்திருக்கலாம். அதனால், குழந்தையின் உறவினர்கள் மண்ணில் புதைத்துவிட்டு சென்றிருக்கலாம். அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர். 24 மணி நேரமும் ஆள் நடமாட்டம் உள்ள பேருந்து நிலையம் பகுதியில் பெண் சிசு புதைக்கப்பட்டிருந்தது, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.