சுடச்சுட

    

    வேடசந்தூர் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் மாற்றுப் பயிர் ஆராய்ச்சிக்கு பரிந்துரை

    By DIN  |   Published on : 11th September 2019 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    theni

    இந்திய வேளாண் ஆராய்ச்சி  நிறுவனம் பரிந்துரையைத் தொடர்ந்து, புகையிலைக்கு மாற்றாக கண்வலிக் கிழங்கு, மிளகாய், முருங்கை மற்றும் மக்காச்சோள ஆராய்ச்சியில் வேடசந்தூர் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் களம்  இறங்கவுள்ளது.
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், சுமார் 55 ஏக்கரில் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. கடந்த 1948 முதல் செயல்பட்டு வரும் இந்த ஆராய்ச்சி நிலையம், தமிழகத்தில் புகையிலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான விதை, நாற்றுகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வந்தது. தமிழகத்தை பொருத்தவரை திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை, நாகை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் புகையிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. 
    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வந்த புகையிலை பயிர், தற்போது 14 ஆயிரம் ஏக்கராக குறைந்து விட்டதாகக்  கூறப்படுகிறது. இதனால், புகையிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விவசாயிகள் கொள்முதல் செய்து வந்த  புகையிலை விதை மற்றும் நாற்றுகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. கடந்த ஆண்டு 200 கிலோ விதைகள்  கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு 50 கிலோ விதைகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே புகையிலை சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தண்ணீர் தட்டுப்பாடு, இடைதரகர்களின் தலையீடு காரணமாக உரிய விலை கிடைக்காத காரணங்களால் மாற்றுப் பயிர்களுக்கு மாற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    பழைமையான ஆராய்ச்சி நிலையம்: மண்ணியல் துறை, பயிர் இன பெருக்கத்துறை, உழவியல் துறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு 3 விஞ்ஞானிகள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்கள் பணியாற்றி வந்தனர். சுமார் 71 ஆண்டுகள் பழைமையான இந்த மையத்தில் தற்போது உழவியல் துறைக்கு மட்டுமே ஒரு விஞ்ஞானி பணியாற்றி வருகிறார். அதேபோல், தொழில்நுட்ப உதவியாளர்களும் 4 ஆக குறைந்துவிட்டனர். பணியாளர் ஓய்வுப் பெறும்போது,  அந்த பணியிடம் மீண்டும் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து வந்தது. இதனால், ஒரு  காலத்தில் விஞ்ஞானிகள்,  தொழில்நுட்பப் பணியாளர்கள் என சுமார் 40 பேர் பணியாற்றி வந்த இந்த ஆராய்ச்சி நிலையத்தில்  தற்போது மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் உள்ளனர்.
    மாற்றுப் பயிர் ஆராய்ச்சிக்கு மாறுகிறது: இதனிடையே பதப்படுத்தப்பட்ட புகையிலைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், புகையிலை தொடர்பான ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே அறிவுறுத்தி வந்தது. அதன்படி, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள தலைமை ஆராய்ச்சி நிலையம், குண்டூர், ஜெலுகுமிலி, கந்துக்கூரு, களவச்சேர்லா, ஹன்சூர் (கர்நாடகா), தின்ஹட்டா (மேற்குவங்கம்), வேடசந்தூர் (தமிழ்நாடு) ஆகிய அனைத்து ஆராய்ச்சி மையங்களிலும் புகையிலை ஆராய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புகையிலைக்கு மாற்றாக, ஒவ்வொரு மையத்திலும் குறிப்பிட்ட சில உணவுப் பயிர்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 
    இதுதொடர்பாக வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மைய அலுவலக வட்டாரத்தில் கூறியது: வேடசந்தூர் மட்டுமின்றி, அனைத்து புகையிலை ஆராய்ச்சி நிலையங்களிலும்  மாற்றுப் பயிர் ஆராய்ச்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    அதன்படி, வேடசந்தூர் ஆராய்ச்சி  நிலையத்திற்கு கண் வலிக் கிழங்கு, பச்சை மிளகாய், முருங்கை, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கண்வலிக் கிழங்கு விதைகள் உற்பத்தி செய்யும்  பணி, வேடசந்தூர் ஆராய்ச்சி நிலையத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai