சுடச்சுட

  

  மர வளர்ப்புக்கு மாணவர்களை ஊக்குவிக்கும் அரசுப் பள்ளி! 2.5 ஏக்கரில் 300 மரக்கன்றுகள் வளர்ப்பு

  By DIN  |   Published on : 13th September 2019 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  theni

  வேடசந்தூர் அருகே 2.5 ஏக்கரில் 300 மரக்கன்றுகளை நட்டு, அரசுப் பள்ளி கடந்த 2 ஆண்டுகளாகப் பராமரித்து வருவது, மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
          மரம் வளர்ப்பு குறித்து, அரசு அலுவலகங்கள் முதல் திருமண நிகழ்ச்சிகள் வரையிலும் பல்வேறு வகையான விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுவதோடு, இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதில், எத்தனை கன்றுகள் தொடர்ந்து பராமரித்து மரங்களாக உருவாக்கப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
        இதுபோன்ற சூழலில் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, அவற்றைத் தொடர்ந்து பராமரித்து எதிர்கால தலைமுறையான மாணவர்களுக்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த தேவநாயக்கன்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
       இப்பள்ளியில் தேவநாயக்கன்பட்டி, அம்மாப்பட்டி, நத்தப்பட்டி,  தொக்குவீரன்பட்டி, குஞ்சுவீரன்பட்டி, ஸ்ரீராமபுரம், பூத்தாம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 186 மாணவர்கள் தற்போது பயின்று வருகின்றனர். மொத்தமுள்ள 5.25 ஏக்கர் பரப்பில் 5 வகுப்பறைகளுக்கு மட்டுமே கட்டடம் உள்ள நிலையில், மீதமுள்ள பகுதி கடந்த பல ஆண்டுகளாக காலியாகவே இருந்து வந்தது.
       இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் மரம் வளர்ப்புக்கான முயற்சிகளை தலைமையாசிரியர்களாகப் பணியாற்றிய துரைராஜ், வெங்கடேசன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். அதன் பலனாக, சுமார் 2.5 ஏக்கரில் 200-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நட்டுவைத்து, பள்ளி நிர்வாகமும், மாணவர்களும் பராமரித்து வருகின்றனர்.
       இது தொடர்பாக, தேவநாயக்கன்பட்டி அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் ஜெ. வயநமசி கூறியது: மரம் வளர்ப்பு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்திக் கொண்டிருக்காமல், எங்கள் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள் செயல்வடிவம் கொடுத்துள்ளனர். வேம்பு, பூவரசு, புங்கை, புளி உள்ளிட்ட 15 வகையான 206 மரக்கன்றுகளை நடவு செய்து, கடந்த 2 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறோம்.      மேலும், மாணவர்கள் தங்களது பிறந்தநாளின்போது கொண்டுவந்து நடவு செய்த சுமார் 100 கன்றுகளையும் பராமரித்து வருகிறோம். மரக் கன்றுகள் பராமரிப்பில் மாணவர்கள் மட்டுமின்றி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகளையும் பயன்படுத்தி வருகிறோம்.      மாணவர்கள் நட்டு வைத்த கன்றுகளுக்கு அருகே அவரவர் பெயரை குறிப்பிட்டு பலகை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 
        தூய்மையான காற்றுக்கும், மழைப் பொழிவுக்கும் மரங்கள் அவசியம் என்பதை, மாணவர்களிடம் சுட்டிக்காட்டி மரம் வளர்ப்புக்கு ஊக்குவித்து வருகிறோம் என்றார்.

  9 ஆம் வகுப்பு மாணவி சோபனா (நத்தப்பட்டி): 
       ஐந்து ஆண்டுகள் மட்டுமே இப்பள்ளியில் படிப்பதற்கான சூழல் இருந்தாலும், 3 ஆண்டு காலம் மரக் கன்றுகளை பராமரிப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. மரங்களின் பயன்பாடு மற்றும் அவசியம் குறித்து ஆசிரியர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு, பள்ளியில் மட்டுமின்றி எங்கள் வீடுகளிலும் மரம் வளர்க்கும் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
  9 ஆம் வகுப்பு மாணவி தீபா பொன்மணி (அம்மாபட்டி): 
       நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி என்ற சாதனையை எங்கள் பள்ளி படைத்துள்ளது. அப்போது கிடைத்த மகிழ்ச்சியை விட 300-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை தொடர்ந்து பராமரித்து வரும் பள்ளி என்பதே எங்களுக்கு மிகப்பெரிய கௌரவமாக உள்ளது என்றார்.    மரம் வளர்ப்புக்கு அரசுப் பள்ளி அளித்துவரும் முக்கியத்துவம் தேவநாயக்கன்பட்டி பகுதி மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai