அடிப்படை வசதி கோரி பழனி சார்-ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
By DIN | Published On : 19th September 2019 08:09 AM | Last Updated : 19th September 2019 08:09 AM | அ+அ அ- |

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பழனியில் சார்-ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
பழனியை அடுத்துள்ள கோதைமங்கலம் கிராமத்தில் உள்ள கொத்தனார் காலனியில் முன்னூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி , சாக்கடை வசதி, சுகாதார நிலையம், நியாயவிலைக் கடை உள்ளிட்ட தேவைகள் செய்து கொடுக்கப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரி கிராம மக்கள் பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி பெண்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பழனியில் உள்ள சார்-ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து சார்-ஆட்சியரின் உதவியாளரிடம் அவர்கள் மனுக்களை வழங்கி விட்டுச் சென்றனர்.