"வேடசந்தூர், குஜிலியம்பாறை பகுதியில் 155 கிராமங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைக்கப்படும்'

வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை வட்டத்திற்குள்பட்ட 155 கிராமங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில்

வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை வட்டத்திற்குள்பட்ட 155 கிராமங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
 திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மற்றும் நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம், சாலை வசதி குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தலைமை வகித்தார். ஆட்சியர் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். 
இதில் வனத்துறை அமைச்சர் பேசியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கத்தில் தண்ணீர் பற்றாக்குறைக் காரணமாக தற்போது 10 கிணறுகள் மற்றும் 6 ஆழ்துளை கிணறுகளின் மூலம் 15 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, வழியோர கிராமங்களுக்கு 5 லட்சம் லிட்டரும், மாநகராட்சிப் பகுதிகளுக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீரும் விநியோகிக்கப்படுகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 90 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, மாநகராட்சியுள்ள 18 வார்டுகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாளும், மீதமுள்ள 30 வார்டுகளுக்கு 4 நாள்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டிற்காக 160 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 430 சிறு மின்விசை இறைப்பான்கள் மூலம் 13.70 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. 
மாநகராட்சி பகுதிகளின் தேவைக்கு கூடுதலாக 70 லட்சம் லிட்டர் குடிநீர் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   தற்போது, வேடசந்தூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 772 கிராமங்களுக்கும், 5 பேரூராட்சிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதில், விடுபட்ட குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 53 கிராமங்கள், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 82 கிராமங்கள், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட 20 கிராமங்கள் என மொத்தம் 155 கிராம பகுதிகளுக்கு 2 ஆம் கட்ட திட்டத்தின்படி குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் தேன்மொழி, பரமசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குருராஜன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) (பொ)  அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com