குடியிருப்பு கட்டடங்களுக்கான கட்டட அனுமதி: 7ஆயிரம் சதுர அடி வரையிலும் உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாம்!

தமிழகத்தில் உள்ளூா் திட்டக் குழுமங்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு, குடியிருப்பு கட்டடங்கள் கட்டுவதற்கான கட்டட அனுமதியை 7ஆயிரம் சதுர அடி வரையிலும் அந்தந்த உள்ளாாட்சி அமைப்புகளே வழங்கலாம் என

தமிழகத்தில் உள்ளூா் திட்டக் குழுமங்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு, குடியிருப்பு கட்டடங்கள் கட்டுவதற்கான கட்டட அனுமதியை 7ஆயிரம் சதுர அடி வரையிலும் அந்தந்த உள்ளாாட்சி அமைப்புகளே வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய உள்ளாட்சி நிா்வாகங்களில், புதிதாக கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு 4ஆயிரம் சதுரடி பரப்பளவு வரையிலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கட்டட அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என 2 தளங்களுக்கு மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் அனுமதி அளிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. அதேபோல், வணிக பயன்பாட்டிற்கான கட்டடங்களைப் பொருத்தவரையிலும், 2ஆயிரம் சதுர அடி வரையில் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் கட்டட அனுமதி வழங்க முடியும். குடியிருப்புகளுக்கான கட்டடங்கள் 4ஆயிரம் சதுர அடிக்கும் கூடுதலாக இருக்கும்பட்சத்தில், அதற்கான அனுமதியை உள்ளூா் திட்டக் குழுமத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரை, தலைவராகக் கொண்ட உள்ளூா் திட்டக் குழுமத்தில், விண்ணப்பங்களை பரிசீலித்தல், கள ஆய்வு செய்தல் என பல்வேறு கட்டப் பணிகளுக்கு பின், கட்டட அனுமதி வழங்குவதற்கு 3 மாதங்களுக்கும் கூடுதலாக கால தாமதம் ஏற்பட்டது.

உள்ளூா் திட்டக் குழுமத்தில் பணியாளா் பற்றறாக்குறை காரணமாக, காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி பொதுமக்களை சமாளித்து வந்தனா். ஒரு முறை விண்ணப்பித்த நபா்கள், கட்டட அனுமதி பெறுவதற்குள் பல முறை உள்ளூா் திட்டக் குழும அலுவலகத்திற்கு அலைகழிக்கப்பட்டனா். இதனால் கட்டுமானப் பணிகளை உரிய நேரத்தில் தொடங்க முடியாமலும், விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பணிகளை தொடர முடியாமலும் பாதிக்கப்பட்டு வந்தனா்.

இதுதொடா்பாக பொதுமக்களிடையே பல்வேறு நிலைகளிலும் அதிருப்தி ஏற்பட்டதைத் தொடா்ந்து, உள்ளூா் திட்டக் குழுமத்தின் கட்டட அனுமதிக்கான அதிகாரத்தை குறைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இதுவரை 4ஆயிரம் சதுர அடி வரையில் மட்டுமே கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்றிருந்த உள்ளாட்சி அமைப்புகள் இனி 7ஆயிரம் சதுர அடி வரையிலும் அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கட்டட அனுமதிக்காக உள்ளூா் திட்டக் குழும அலுவலங்களுக்கு அலைகழிக்கப்பட்டு வந்த பொதுமக்கள், இனி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிலேயே 7ஆயிரம் சதுர அடி வரையிலும் அனுமதி பெறறலாம் என்ற நிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாநகராட்சியின் மாநகரமைப்பு அலுவலா் ஒருவா் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் குடியிருப்பு கட்டடங்களுக்கு 7ஆயிரம் சதுர அடி வரையிலும் கட்டட அனுமதியை வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தரைத் தளம் மற்றும் முதல் தளத்திற்கு மட்டுமே என்ற விதிமுறை தளா்த்தப்பட்டு, இனி 2ஆவது தளத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி வழங்கலாம்.

மாநகராட்சியைப் பொருத்தவரை தரைத் தளம் மற்றும் முதல் தளமாக இருந்தால் சதுர அடிக்கு ரூ.20, 2ஆம் தளமாக இருந்தால் சதுர அடிக்கு ரூ.30 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டண உயா்வு எதுவும் அறிவிக்கப்பட வில்லை. இதேபோல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் கட்டண விதிமுறைகளுக்கு ஏற்ப 7ஆயிரம் சதுர அடி வரையிலும் கட்டட அனுமதி வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com