குடிநீர், சாலை வசதிகளுக்கான திட்ட அறிக்கையை அதிகாரிகள் பரிந்துரைத்தால் உடனடியாக நிதி ஒதுக்கீடு

திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதிகளுக்கான திட்ட அறிக்கையினை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பரிந்துரை செய்தால், உடனடியாக அதற்கான நிதி ஒதுக்கீடு பெற்றுத் தரப்படும்


திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதிகளுக்கான திட்ட அறிக்கையினை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பரிந்துரை செய்தால், உடனடியாக அதற்கான நிதி ஒதுக்கீடு பெற்றுத் தரப்படும் என வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
 திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
இதற்கு  தலைமை வகித்து அமைச்சர் பேசியது: திண்டுக்கல் மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 302 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 3,084 உட்கிடை கிராமப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து  தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை  நிறைவேற்றிக்  கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை, குடிநீர் சரியாக கிடைக்காத 57 இடங்களில் 24 இடங்களுக்கான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஆத்தூர் பிரதான குழாய்கள் இணைக்கும் பணி முடிவடைந்துள்ளது. 
இதன்மூலம் கொடகனாறு-1 மற்றும் 2, பார்வதிபுரம் ஆகிய  நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. 
இதன்மூலம் திண்டுக்கல் மாநகராட்சிக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும். இதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவற்றின் தேவை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கையாக பட்டியலிட வேண்டும். மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைப்பதற்கு அதிகாரிகள் தரப்பில் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில், அதற்கான நிதியை தமிழக அரசிடமிருந்து உடனடியாக பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழனி கோயிலை, திருப்பதிக்கு நிகராக மாற்றும் வகையில் புதிய இணை ஆணையருடன்  விவாதித்து அதை மேம்படுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்  என்றார். 
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் சே.தேன்மொழி, மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, மாநகராட்சி ஆணையர்  செந்தில்முருகன், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வி.மருதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com