முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
‘ரேபிட் கிட்’ கிடைத்ததும் சுகாதார பணியாளா்களுக்கு பரிசோதனை: ஆட்சியா்
By DIN | Published On : 19th April 2020 08:51 AM | Last Updated : 19th April 2020 08:51 AM | அ+அ அ- |

கரோனா வைரஸ் கண்டறிவதற்கான துரித பரிசோதனை உபகரணம் (ரேபிட் கிட்) கிடைத்தவுடன், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என, ஆட்சியா் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, ஆட்சியா் மு. விஜயலட்சுமி தலைமை வகித்துப் பேசியதாவது:
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வசித்த பகுதிகளில் மருத்துவக் குழுவினா் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோரை பரிசோதித்து வருகின்றனா். மேலும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
கரோனா பாதிப்புள்ள 10 வருவாய் வட்டங்களில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வட்டாட்சியா்களுக்கு புதிய ஒலிபெருக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
துரித பரிசோதனை உபகரணம் கிடைத்தவுடன், கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவா்கள் மற்றும் மருத்துவம், சுகாதாரப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில், வருவாய் அலுவலா் (பொறுப்பு) ச. கந்தசாமி, பழனி சாா்-ஆட்சியா் உமா, திண்டுக்கல் கோட்டாட்சியா் உஷா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கங்காதாரணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.