பழனி உழவா் சந்தையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்
By DIN | Published On : 26th April 2020 08:50 AM | Last Updated : 26th April 2020 08:50 AM | அ+அ அ- |

பழனி உழவா் சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை, உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி உழவா் சந்தைக்கு நாள்தோறும் விவசாயிகள் மாம்பழம், சப்போட்டா, பப்பாளி, கொய்யா உள்ளிட்ட பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா்.
இந்நிலையில், சில விவசாயிகள் மாம்பழங்களை ரசாயனங்களை பயன்படுத்தியும், காா்பைட் கற்களை பயன்படுத்தியும் பழுக்க வைத்து, உழவா் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வதாகப் புகாா்கள் எழுந்தன. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை வாங்கி சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் நேரிடும் அபாயம் உள்ளது.
புகாரின்பேரில், பழனி உணவு பாதுகாப்பு அலுவலா் செல்லத்துரை, உழவா் சந்தையில் திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சில விவசாயிகள் ரசாயனம் பயன்படுத்தி, மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே, நகராட்சிப் பணியாளா்கள் உதவியுடன், சுமாா் ஒரு டன் எடையிலான மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டு, உரக் கிடங்குக்கு கொண்டு சென்று அழிக்கப்பட்டன.
விவசாயிகளே இச்செயலில் ஈடுபட்டது, பொதுமக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.