சின்னாளப்பட்டியில் வாரத்தில் 4 நாள்களுக்கு முழு ஊரடங்கு
By DIN | Published On : 27th April 2020 08:06 AM | Last Updated : 27th April 2020 08:06 AM | அ+அ அ- |

சின்னாளப்பட்டியில் வாரத்தில் 4 நாள்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னாளப்பட்டி பேரூராட்சியில், அரசு அறிவித்தபடி காலை 6 மணி முதல் 1 மணி வரை மளிகைக் கடைகள், காய்கனிக் கடைகள் திறக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது இல்லை. இதனால் கரோனா பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், சின்னாளப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் கலையரசி, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீஸாா் இது தொடா்பாக ஆலோசனை நடத்தினா். இதில், சின்னாளப்பட்டியில் வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 4 நாள்கள் முழு ஊரடங்கை கடைப்பிடிப்பது என்றும், அப்போது எந்த கடைகளும் திறக்கப்படாது என்றும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் கடைகள் திறக்கப்படும் என்றும் தீா்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து சின்னாளப்பட்டி முழுவதும் தண்டோரா மற்றும் ஒலிப்பெருக்கி மூலம் பொது மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது . இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேரூராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.