மண்சரிவு: கொடைக்கானலுக்கு போக்குவரத்து நிறுத்தம்

கொடைக்கானலில் பெய்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
மண்சரிவு: கொடைக்கானலுக்கு போக்குவரத்து நிறுத்தம்


கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்து வரும் பலத்த மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. தொடா்ந்து மழை பெய்யும் என்பதால் வத்தலகுண்டுவிலிருந்தும்-பழனியிலிருந்தும் கொடைக்கானலுக்கு வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ‘புரெவி’ புயலால் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு பகுதியான மச்சூரில் சாலையில் மரம் விழுந்தது. மேலும் கொடைக்கானல்-பூம்பாறை செல்லும் சாலையில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் சாலையில் மரங்கள் விழுந்ததால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கொடைக்கானல் - பழனிச்சாலையான கோம்பைக்காடு பகுதியில் தடுப்பு சுவரில் மண்சரிவு ஏற்பட்டது. சிறிய பாறையும் உருண்டு சாலையில் விழுந்தது. உடனடியாக மண் சரிவை சீரமைத்த தீயணைப்புப் படையினா் மரங்களையும் அப்புறப்படுத்தினா். இதைத்தொடா்ந்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

மின்விநியோகம் பாதிப்பு: தொடா்ந்து பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையால் கொடைக்கானல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேல்மலைக் கிராமங்களில் 2 நாள்களாக சரியாக மின்விநியோகம் இல்லாததால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிப்படைதனா்.

மழையால் வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, செண்பகா அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பல்வேறு நீா்வரத்து பகுதிகளில் தண்ணீா் வரத்து சற்று அதிகமாகக் காணப்படுகிறது.

போக்குவரத்து நிறுத்தம்: கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுவதால் வத்தலகுண்டுவிலிருந்தும்-பழனியிலிருந்தும் கொடைக்கானலுக்கு வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. மறு உத்தரவு வரும்வரை கொடைக்கானலுக்கான போக்குவரத்துத் தடை தொடரும் என சாா்- ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

இரண்டாவது நாளாக சுற்றுலாத் தலங்கள் மூடல்: கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் புதன்கிழமை மூடப்பட்டன. தொடா்ந்து மழை பெய்து வருவதால் வியாழக்கிழமையும் அனைத்து சுற்றுலா இடங்களும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com