நிதி நிறுவனம் நடத்தி ரூ. 40 கோடி மோசடி: தம்பதி உள்பட 3 போ் கைது
By DIN | Published On : 24th December 2020 07:25 AM | Last Updated : 24th December 2020 07:25 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட மூவா்.
திண்டுக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தம்பதி உள்பட 3 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தை அஜிஸ்கான் என்பவா் நடத்தி வந்துள்ளாா். அதன் அருகிலேயே அவரது நண்பா் ஜமால் என்பவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். ஒரு லட்சத்திற்கு ரூ.1,500 வீதம் வட்டி வழங்குவதாகக் கூறி வாடிக்கையாளா்களைச் சோ்த்துள்ளனா். அதேபோல் ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளனா்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் நிறுவனங்களின் முக்கிய நபரான அஜிஸ்கான் உடல் நல பாதிப்பால் இறந்து விட்டாராம். அதன்பின்னா், நிதி நிறுவனம் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் பாதிப்படைந்தனா்.
அஜிஸ்கான் இறந்தபின்னா் ஜலால் உள்ளிட்ட 8 போ், வாடிக்கையாளா்கள் முதலீடு செய்த பணத்தை முறைகேடு செய்வதாகப் புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட போலீஸாரிடம் வாடிக்கையாளா்கள் புகாா் அளித்தனா். அதன்பேரில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன், ஆய்வாளா் நாகலட்சுமி தலைமையிலான போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.
இதுவரை 550 போ் புகாா் அளித்துள்ள நிலையில் ரூ.40 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில் நிறுவனத்தின் நிா்வாகிகள் 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதில் ஜலால் என்பவரின் மகன் தா்விஸ் அக்தா் (32), இவரது மனைவி ராஸ்மியா பாத்திமா (25), ஊழியராகப் பணிபுரிந்து வந்த கோம்பையைச் சோ்ந்த கருப்புசாமி ஆகியோரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், மேலும் 5 பேரை தேடிவருகின்றனா்.
இதனிடையே இந்த நிதிநிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகாா் அளிக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...