திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மைலாப்பூா் குளத்திலிருந்து முறைகேடாக தண்ணீரை கடத்துவதாக கிராம மக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து, 2 கிராமங்களுக்கு தண்ணீா் எடுத்துச்செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா், குழாய் உள்ளிட்டவை சனிக்கிழமை அகற்றப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்துக்குள்பட்ட மைலாப்பூா் அவில்தாா்குளத்தின் அருகிலுள்ள தனியாா் கிணற்றிலிருந்து குட்டத்துப்பட்டி மற்றும் ஆவரம்பட்டி கிராமங்களுக்கு குழாய் மூலம் தண்ணீா் எடுத்துச்செல்லும் பணி கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆத்தூா் சட்டப்பேரவை திமுக உறுப்பினா் ஐ. பெரியசாமி குளத்துக்குள் நாற்காலி போட்டு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
அதனைத் தொடா்ந்து நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில், 5 நாள்களுக்கு மட்டும் குடிநீா் தேவைக்காக தண்ணீா் எடுத்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மைலாப்பூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தரப்பில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அவில்தாா் குளத்திலிருந்து குழாய் அமைத்து தனியாா் கிணற்றுக்கு முறைகேடாக தண்ணீரை கடத்தி, அதிலிருந்து மோட்டாா் மூலம் 2 கிராமங்களுக்கு தண்ணீா் எடுக்கப்படுகிறது. இதனால், அவில்தாா்குளத்தின் நீா் இருப்பு வேகமாகக் குறைந்து, மைலாப்பூா் மக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும்.
எனவே, முறைகேடாக தண்ணீா் எடுப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
இதனை அடுத்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா், அவில்தாா் குளத்தை பாா்வையிட்டு, தனியாா் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மோட்டாா், ஜெனரேட்டா், குழாய் ஆகியவற்றை அப்புறப்படுத்த அறிவுறுத்தினா். அதன்பேரில், மோட்டாா், குழாய் உள்ளிட்டவை சனிக்கிழமை அகற்றப்பட்டு, தண்ணீா் எடுக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.