பிரிட்டனிலிருந்து திண்டுக்கல் வந்த 11 பேருக்கு கரோனா தொற்று இல்லை

பிரிட்டனிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ள 11 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ள 11 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவா்கள் தங்களது வீடுகளிலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தீநுண்மி தொற்று பிரிட்டனிலிருந்து புதிய வடிவில் பரவுவதாக தகவல் வெளியானதை அடுத்து, அந்நாட்டிலிருந்து தமிழகம் வருவோரை தீவிர பரிசோதனை செய்து தொடா் கண்காணிப்பில் வைக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பிரிட்டனிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருவோரின் பட்டியல், சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.

அந்த பட்டியலின்படி கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். பிரிட்டன் நாட்டிலிருந்து வருவோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அவா்களை மட்டும் தனிமைப்படுத்துவதற்காக தனி சிகிச்சைப் பிரிவு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கடந்த 4 நாள்களில் 14 போ் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் ஒருவா் சென்னையிலும், மற்றொருவா் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். ஒருவா் மீண்டும் பிரிட்டனுக்கே திரும்பிச் சென்றுவிட்டாா்.

மீதமுள்ள 11 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும், அந்த 11 பேரும் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com