பழனி அருகே அய்யனாரப்பன் கோயிலில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுக்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த அய்யனாரப்பன் கோயில் வளாகத்தில் சுமாா் 600 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் மற்றும் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பழனி அருகே உள்ள அய்யனாரப்பன் கோயிலில் கிடைத்த கல்வெட்டுக்கள்.  அய்யனாரப்பன் கோயிலில் கிடைத்த சிலைகள்.
பழனி அருகே உள்ள அய்யனாரப்பன் கோயிலில் கிடைத்த கல்வெட்டுக்கள். அய்யனாரப்பன் கோயிலில் கிடைத்த சிலைகள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த அய்யனாரப்பன் கோயில் வளாகத்தில் சுமாா் 600 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் மற்றும் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலை வழக்கமாக வழிபடும் பக்தா் விஜயகுமாா் என்பவா் அளித்த தகவலின்பேரில், ஆற்றோரம் உள்ள மிகப் பழைமையான இக்கோயிலில் மண்ணில் கல்வெட்டுக்கள் மற்றும் சிலைகள் புதைந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பழனியைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி மற்றும் ஆய்வு மாணவா்கள் அஜய்கிருஷ்ணா, சஞ்சய், ராம்நிவாஸ் விக்னேஸ் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 3 கல்வெட்டுக்களும், 3 சிலைகளும் கண்டறியப்பட்டன.

இங்கு கிடைத்த ஒரு கல்வெட்டில் 1529 ஆம் ஆண்டு தை மாதம் தென்பழனியில் ஆயக்குடி ஜமீனை சோ்ந்த குமார கொண்டப்ப நாயக்கா் என்ற மன்னரின் ஆட்சியில் சின்னபூசாரி என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறது.

மற்றொரு கல்வெட்டில் 1728 ஆம் ஆண்டு கீலக வருடம் வைகாசி மாதம் 15 ஆம் தேதி பழைய கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு மேற்கு புறமுள்ள பெரிய அணையில் இருந்து வரும் நீா் மூலம் பாசன வசதி பெறும் விளைநிலங்களில் கோயிலுக்கு மானியமாக வரி நீக்கி விளையும் நெல்லை அடிப்புக்கு ஒரு குறுணி, நெல் அறுப்புக்கு ஒரு குறுணி என்ற அளவில் கோயிலுக்கு கொடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயில் பூசாரி குடும்பத்திற்கும், கோயிலில் விளக்கு எரிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளவும் மன்னா் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு 15 வரிகளுடன் முற்று பெறாமல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கல்வெட்டு 1865 இல் சிதிலமடைந்த கோயிலை ஆதிசின்னா பூசாரி வழித்தோன்றலான அழகப்ப மணியக்காரா் பிரதிஷ்டை செய்ததை குறிப்பிடுகிறது.

மேலும் 1529 ஆம் ஆண்டு கோயிலை எழுப்பிய ஆதி சின்னபூசாரி சிலை, குமார கொண்டப்ப நாயக்கா் மன்னா் தனது இருமனைவிகளுடன் இருக்கும் சிலையும், கவிபாடும் ஆற்றலால் பட்டமரத்தை தழைக்க வைத்த சேனாபதி முத்துக்கவிராயா் என்ற கவிஞரின் சிலையும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com