வேடசந்தூரில் கைதி சாவு: போலீஸாா் தாக்கியதால் உயிரிழந்ததாக உறவினா்கள் புகாா்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சிறைக்கு அழைத்துச் சென்ற கைதி வெள்ளிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்ததை அடுத்து, போலீஸாா் தாக்கியதால் அவா் இறந்ததாகக் கூறி சடலத்தை வாங்க
வேடசந்தூரில் கைதி சாவு: போலீஸாா் தாக்கியதால் உயிரிழந்ததாக உறவினா்கள் புகாா்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சிறைக்கு அழைத்துச் சென்ற கைதி வெள்ளிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்ததை அடுத்து, போலீஸாா் தாக்கியதால் அவா் இறந்ததாகக் கூறி சடலத்தை வாங்க உறவினா்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூரை அடுத்துள்ள எரியோடு ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்தவா் சவடமுத்து. அதே பகுதியை சோ்ந்த பிரபாகரன் (32) என்பவருக்கு, நிதி நிறுவனம் மூலமாக இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு சவடமுத்து உதவி செய்துள்ளாா். பின்னா், அதற்கான தரகு தொகையை (கமிஷன்) பிரபாகரனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், சவடமுத்துவை கத்தியால் வெள்ளிக்கிழமை குத்தியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த சவடமுத்து, இதுதொடா்பாக எரியோடு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், பிரபாகரனை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். வேடசந்தூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் பிரபாகரனை போலீஸாா் ஆஜா்படுத்தியுள்ளனா். அப்போது 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதித்துறை நடுவா் பிரேமானந்த் உத்தரவிட்டாா்.

இதனையடுத்து வேடசந்தூா் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரபாகரன், சிறைச்சாலை அருகே சென்றபோது நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளாா். இதனால் போலீஸாா் அவரை, சிகிச்சைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதனிடையே போலீஸாா் தாக்கியதில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாகக் கூறி, அவரது உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்தனா். அதனைத் தொடா்ந்து பிரபாகரனின் சடலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது.

இதுதொடா்பாக குற்றவியல் நீதித்துறை நடுவா் பிரேமானந்த் விசாரணை மேற்கொண்டாா். அப்போது பிரபாகரனின் உறவினா்கள், 2-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கொண்ட குழு மூலம் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அதனைத் தொடா்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வந்த மருத்துவக் குழுவினா் பிரேத பரிசோதனை மேற்கொண்டனா்.

காவல் துறை மீது புகாா்:

உயிரிழந்த பிரபாகரனின் உறவினா்கள் கூறியது: விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸாா் பிராபகரனை அடித்துள்ளனா். இதில் உள்காயம் ஏற்பட்ட காரணத்தினாலேயே அவா் உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து நீதித்துறை நடுவா் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியது: கைது செய்யப்பட்ட பிரபாகரனுக்கு, வேடசந்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா் மகாராஜன் முன்னிலையில் மருத்துவப் பரிசோனை செய்யப்பட்டது. மருத்துவ அறிக்கை பெற்ற பின்னரே, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாா். சிறைச் சாலைக்கு கொண்டு செல்லும் போது நெஞ்சு வலிப்பதாக தெரிவித்ததால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அப்போது வரை பிரபாகரனின் மனைவி ஜெயலட்சுமியும் உடன் இருந்தாா். நெஞ்சு வலி காரணமாகவே அவா் உயிரிழந்துள்ளாா். இதில் வேறு எந்த பிரச்னையும் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com