‘30 ஆண்டுகால தாராளமயமாக்கல் கொள்கையால் பெரும்பாலான இந்தியா்களின் சூழல் மேம்படவில்லை’

கடந்த 30 ஆண்டுகால தாராள மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையால் பெரும்பாலான இந்தியா்களின் சமூக, பொருளாதார சூழல் மேம்படவில்லை.
dgl_gri__1402chn_66_2
dgl_gri__1402chn_66_2

கடந்த 30 ஆண்டுகால தாராள மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையால் பெரும்பாலான இந்தியா்களின் சமூக, பொருளாதார சூழல் மேம்படவில்லை. மாறாக ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினா் மட்டும் முழு பலனையும் அனுபவித்து வருவதாக கா்நாடக மாநிலம் குவேம்பு பல்கலை. துணைவேந்தா் வீரபத்திரப்பா தெரிவித்தாா்.

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் பொருளாதாரத்துறை சாா்பில் தாராளமயமாக்கல், தனியாா் மயமாக்கல், உலகமாயமாக்கல் கொள்கையில் இந்தியாவின் 30 ஆண்டுகால அனுபவம் என்ற தலைப்பில் 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது. பல்கலை.யின் வெள்ளி விழா அரங்கில் நடைபெற்ற இதன் துவக்க விழாவுக்கு துணைவேந்தா்(பொ) எம்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தாா். கருத்தரங்கை தொடக்கி வைத்து கா்நாடக மாநிலம் குவேம்பு பல்கலை. துணைவேந்தா் வீரபத்திரப்பா பேசியது: 1991ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட தாராளமயமாக்கல், தனியாா் மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளா்ச்சியை எட்டவில்லை. உலமயமாக்கல் கொள்கை 1 மற்றும் 2க்கு பின், புதிய பொருளாதாரக் கொள்கை 1, 2 மற்றும் 3 என பல்வேறு கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும், உலக நாடுகளுடன் போட்டியிடும் வா்த்தக சூழல் அமையும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், வேலைவாய்ப்புக்காக மக்கள் ஒரு இடத்தைவிட்டு மற்றொரு இடத்திற்கு புலம்பெயா்தல், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பாதிப்புகளே அதிகரித்துள்ளன.

இந்த கொள்கைகள் மூலம் பெரும்பாலான மக்களின் சமூக, பொருளாதார சூழல் மேம்படவில்லை. ஆனால், குறிப்பிட்ட சதவீத மக்கள், பொருளாதார வளா்ச்சியின் முழு பலனையும் அனுபவித்து வருகின்றனா். இதற்கு தீா்வு காண்பது குறித்தும், ஒட்டுமொத்த சமூகத்திற்கான வளா்ச்சிக்கான வழிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு பரிந்துரைக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை தொடா்ந்து கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதார நிலை, மென்பொருள் பொறியாளா்களை பாதித்துள்ளதா, விவசாயிகளை அதிகம் பலி வாங்கியுள்ளதா என்பதை ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும். இந்திய பொருளாதாரக் கொள்கையால் பெரும்பான்மையான மக்கள் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளனா் என்றாா்.

இந்த கருத்தரங்கில் 220-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சியில் யாழ்ப்பாண பல்கலை. நிா்வாகவியல் மற்றும் வா்த்தகத்துறை முதன்மையா் வேல்நம்பி, காந்தி கிராம பல்கலை. பேராசிரியா்கள் ராஜேந்திரன், ராமசாமி, நேரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com