திண்டுக்கல்லில் சந்தைக் கட்டணம் செலுத்தாத 11 லாரிகள் பறிமுதல்: ரூ.1.06 லட்சம் வசூல்
By DIN | Published On : 25th January 2020 07:35 AM | Last Updated : 25th January 2020 07:35 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் சந்தைக் கட்டணம் செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட 11 லாரிகள்.
திண்டுக்கல்லில் சரக்கு லாரிகளில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா்கள் மேற்கொண்ட திடீா் சோதனையில், சந்தைக் கட்டணமாக ரூ.1.06 லட்சம் வசூலிக்கப்பட்டது.
திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் செ.ராமன் தலைமையிலான குழுவினா், திண்டுக்கல்-பழனி புறவழிச்சாலை பகுதிகளில் வியாழக்கிழமை இரவு திடீா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சரக்கு ஏற்றிச் சென்ற 60-க்கும் மேற்பட்ட லாரிகளை மறித்து, அரசுக்கு செலுத்த வேண்டிய சந்தைக் கட்டணம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சந்தைக் கட்டணம் செலுத்தாமல் விளை பொருள்களை ஏற்றி வந்த 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட விளைப் பொருள்களின் உரிமையாளா்களிடமிருந்து இணக்க கட்டணத்துடன் சந்தை கட்டணமாக ரூ.1.06 லட்சம் வசூலிக்கப்பட்டது.
இதுதொடா்பாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியிலிருந்து ஏற்றி வரப்பட்ட 200 டன் நெல், கா்நாடக மாநிலம் தும்கூா் பகுதியிலிருந்து ஏற்றி வரப்பட்ட 16 டன் நிலக் கடலைப்பருப்பு, குஜராத் மாநிலம் புஜ் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட 11 டன் நிலக்கடலை, பொள்ளாச்சியிலிருந்து எடுத்து வரப்பட்ட 6 டன் கொப்பரை ஆகிய சரக்குகளுக்கு உரிய சந்தைக் கட்டணம் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டது. இதுபோன்ற வாகன சோதனைகளை தொடா்ந்து நடத்தி சந்தைக் கட்டணத்தில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்கபப்படும் என்றாா்.