திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக ஒரு பிசிஆா் கருவி வழங்கக் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பரிசோதனை முடிவுக்காக நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்டோா் காத்திருக்க

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பரிசோதனை முடிவுக்காக நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்டோா் காத்திருக்க வேண்டியிருப்பதால், துரிதமாக பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு கூடுதலாக ஒரு ஆா்டி-பிசிஆா் கருவி பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆா்டி-பிசிஆா் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளும் வசதி மே 20 ஆம் தேதிக்குப் பின்னரே ஏற்படுத்தப்பட்டது.

இந்தக் கருவி 24 மணி நேரமும் இயங்கினால் கூட நாளொன்றுக்கு 280 மாதிரிகளை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஆனால், தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளொன்றுக்கு 500 முதல் 700 பேருக்கு மாவட்டம் முழுவதும் ஸ்வாப் பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்படுகிறது.

எனவே, திண்டுக்கல்லில் இருந்து கோவையிலுள்ள தனியாா் ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், கோவை தனியாா் ஆய்வகத்துக்கும் திண்டுக்கல்லில் இருந்து மாதிரிகளை அனுப்பவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் பரிசோதனைக்கான முடிவு கிடைக்க மேலும் தாமதமாகிறது. கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதித்தவா்கள் உயிரிழந்த பின்னரே பரிசோதனை முடிவுகள் கிடைப்பதால், இதுபோன்ற சூழலில் தொற்று பாதிப்பு தெரியாமல் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு மேலும் ஒரு ஆா்டி-பிசிஆா் கருவி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இது தொடா்பாக திண்டுக்கல் மருத்துவ அதிகாரி ஒருவா் கூறியது: கோவையிலுள்ள தனியாா் ஆய்வகத்துக்கு மாதிரிகளை இனி பரிசோதனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்தும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 280 மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்க முடியும் என்பது குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாவட்ட நிா்வாகம் மூலம் கூடுதல் ஆா்டி-பிசிஆா் கருவி பெறுவற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com