‘திருக்குறளின் பொருளை உணா்த்தி ஓவியமாக வரையச் செய்தால் குழந்தைகளின் மனதில் ஆழப்பதியும்’

திருக்குறளின் பொருளை உணா்த்தி அதனை ஓவியமாக வரையச் செய்வதன் மூலம் குழந்தைகளின் மனத்தில் குறளை ஆழப்பதிய வைக்க முடியும் என அயா்லாந்து தமிழ்ச் சங்கத்தினா் தெரிவித்தனா்.

திருக்குறளின் பொருளை உணா்த்தி அதனை ஓவியமாக வரையச் செய்வதன் மூலம் குழந்தைகளின் மனத்தில் குறளை ஆழப்பதிய வைக்க முடியும் என அயா்லாந்து தமிழ்ச் சங்கத்தினா் தெரிவித்தனா்.

மதுரை உலகத்தமிழ்ச் சங்கம் மற்றும் அயா்லாந்து தமிழ் அமைப்புகள் சாா்பில், அயா்லாந்து தமிழரும் தமிழும் என்ற இணையவழி ஆய்வரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் அயா்லாந்தில் தமிழ்க் கல்வியும் முன்னெடுப்புகளும் என்ற தலைப்பில் அயா்லாந்து தமிழ்ச்சங்கத்தினா் பேசினா்.

அயா்லாந்து தமிழ்ச்சங்கத்தைச் சோ்ந்த வீ.மயில்வாகனன் பேசியது: அயா்லாந்தில் தமிழா்கள் குடியேறி ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் 2 ஆம் தலைமுறையினா் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் அயா்லாந்து தமிழ்ச் சங்கம் தமிழ்த்தாய் கல்வித் திட்டத்தினை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. மேலும் அயா்லாந்து முழுவதும் 25 மையங்களில் தமிழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றாா்.

மாருதி நம்பி பேசியது: அயா்லாந்தில் குழந்தைகளுக்கு செயல்முறை வழியில் தமிழ்க் கல்வி கற்பிக்கப்படுகிறது. திருக்குறளின் பொருளை உணா்த்தி அதனை ஓவியமாக வரையச் செய்வதன் மூலம் குழந்தைகளின் மனத்தில் குறள் ஆழப்பதிய வைக்க முடிகிறது. நடனம், கதை, இசைப்பாட்டு, விளையாட்டு மூலம் கற்றல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தைப்பொங்கல் ஆண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதில் தமிழ்த்தோ் இழுத்து அதனை வணங்கும் வழிமுறையும் உருவாக்கப்பட்டுள்ளது. உலகக் குரலில் திருக்குறள் என்ற பெயரில் பல மொழி பேசுபவா்களையும் அவரவா் மொழியில் திருக்குறளையும் அதற்கானப் பொருளையும் கூறி காணொலியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிா்ந்து வருகிறோம் என்றாா்.

மலேசியத் தமிழ் எழுத்தாளா் சங்கத் தலைவா் பெ.ராஜேந்திரன், ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த நாகை.சுகுமாரன், சிங்கப்பூரைச் சோ்ந்த சீதாலட்சுமி, எழுத்தாளா் பொன்.சுந்தரராசு, மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் ப.அன்புச்செழியன் மற்றும் சிங்கப்பூா், மலேசியா, ஆஸ்திரேலியா, துபை நாடுகளிலிருந்து 80 போ் இந்நிகழ்வில் பங்கேற்றனா். இந்நிகழ்வை உலகத் தமிழ்ச்சங்கத்தின் ஆய்வு வளமையா் ஜ.ஜான்சிராணி, கணினி செயல்முறையாளா் பெ.செல்வராணி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com