சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா்கள் வசித்த பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் அண்ணாநகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவா், தனது மனைவி மகனுடன் சென்னையிலுள்ள உறவினா் வீட்டிற்குச் சென்று விட்டு கடந்த 4 ஆம் தேதி காா் மூலம் கொடைக்கானல் திரும்பினாா். அவா்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். தொடா்ந்து அவா்களுக்கும் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவா் வசிக்கும் அண்ணாநகா் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது. இதனால் வெளி நபா்கள் யாரும் உள்ளே செல்லவும், அந்தப் பகுதியிலிருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.